CBSE Class 10, 12 Exam Fee Increased: சிபிஎஸ்இ தேர்வுகளின் போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் அதிக செலவு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது...
சிபிஎஸ் நிர்வாகத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் போது அதிகளவிலான செலவு ஆகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு மட்டும் ரூ.200 கோடி அளவிற்கு பணம் தேவைப்படுகிறது. முன்னதாக தேர்வு முடிவுகளை வெளியிடுதல், தேர்வு நடவடிக்கைகளை கண்காணித்தல், பிழை இல்லாமல் மதிப்பெண் சான்றிதழ்கள், மறுமதிப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அதிகளவிலான பொருட்செலவு ஏற்படுவதால், இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின் மூலம், சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு எவ்வித லாபமோ, இழப்போ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு எவ்வளவு?
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பொதுப்பிரிவு மாணவர்கள் இதுவரை 5 பாடங்களுக்கு ரூ .750 தேர்வுக்கட்டணமாக செலுத்திவந்த நிலையில், இனி ரூ .1,500 செலுத்த வேண்டும்.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணமும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பதிவு மற்றும் இடம்பெயர்வு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
டில்லி மாணவர்களுக்கு 'லக்' :
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுகட்டணமாக இதுவரை ரூ .375 செலுத்திவந்த நிலையில், தற்போது அந்த கட்டணம் ரூ .1.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு, டில்லியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், ரூ .50 செலுத்தினால் போதும் என்றும், மீத தொகையை டில்லி அரசு மானியமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இயின் கட்டண உயர்வு அறிவிப்பை தொடர்ந்து, டில்லி அரசு உடனடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, டில்லியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம் என்றும், அந்த கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.