பள்ளிப் படிப்புக்குப் பிறகு தொழில் வாய்ப்புகள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கான கையேடு தொடர்பான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ளது. போட்டி நிறைந்த வேலைவாய்ப்பு உலகில் தங்கள் குழந்தை தங்கள் வாழ்க்கைப் பாதையை திறம்பட வழிநடத்த எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல்களை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 'மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க அதிகாரம் அளிப்பதில் தொழில் வழிகாட்டுதல் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய வளர்ந்து வரும் மற்றும் மாறும் வேலைவாய்ப்பு உலகில், அர்த்தமுள்ள தொழில் தேர்வுகளுக்கான சரியான கருவிகள் மற்றும் நுண்ணறிவுகளுடன் மாணவர்களை நெறிப்படுத்துவதற்கு பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு அவசியம். இந்த முயற்சியை ஆதரிக்க, ஸ்ரீ மோஹித் மங்கலின் "இந்தியாவில் பள்ளிக் கல்விக்குப் பிறகு தொழில் வாய்ப்புகள் குறித்த பெற்றோர் கையேட்டை” சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.
இந்த விரிவான வழிகாட்டி, பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகள் தொழில் வாய்ப்புகளை திறம்பட ஆராய உதவுவதற்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் நடைமுறை ஆலோசனைகளையும் வழங்குகிறது என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
பெற்றோருக்கான கையேட்டுடன், நுழைவுத் தேர்வுகள் 2025 வழிகாட்டியையும், 21 உயர்கல்வி விவரப் புத்தகங்களையும் சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. அவை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இருவருக்கும் அத்தியாவசிய குறிப்புகளாக செயல்படும். இந்த வளங்கள் பல்வேறு கல்வி மற்றும் தொழில்முறை பாதைகள் குறித்த கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதலை வழங்குகின்றன.
தொழில் வாய்ப்புகள் குறித்த தகவலறிந்த விவாதங்களுக்கு இந்தப் பொருட்களைப் பயன்படுத்துமாறு பள்ளிகளை வாரியம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது, சி.பி.எஸ்.இ 2025-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை நடத்தி வருகிறது. சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 18, 2025 வரை நடைபெற்றன. அதே நேரத்தில், பிப்ரவரி 15, 2025 அன்று தொடங்கிய 12-ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ஏப்ரல் 4, 2025 அன்று முடிவடைகிறது.
சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள பெற்றோர் கையேடு-வைப் பார்வையிடவும் மேலும் தகவலுக்கு, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.