சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் தெரிந்துகொள்ளும் வகையிலான விபரங்கள் அடங்கிய கையேடுகளை, சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தயாரித்துள்ள இந்த கையேடுகளை, நவம்பர் 1ம் தேதி, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.
இந்த விபர கையேடுகள், சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விபர கையேடுகள் குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள இந்த விபர கையேடுகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கையில் கிடைப்பதை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
மாணவர்களும், ஆசிரியர்களும் அதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள், திட்டங்களின்படி தங்களது செயல்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட விபர கையேட்டில், விவாதங்கள் / செயல்பாடுகள் என்ற புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவாதங்கள் / செயல்பாடுகள் பிரிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, அவர்களது இன்டர்னல் மதிப்பெண்களில் சேர்க்க வேண்டும்.
இந்த விபர கையேட்டில், கற்பிக்கும் கலை, பாடங்கள் தேர்வு, தேர்வுமுறை, சிபிஎஸ்இ செயல்பாடுகள், அதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில், கல்விமுறை, தேர்வு குறித்த விபரங்கள், தகுதி மேம்பாட்டு செயல்பாடுகள், பேரிடர் மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, அரசு ஆவணங்களில் பிறந்த தேதி மாற்றம் உள்ளிட்ட பொது அறிவு தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்களுக்கான விபர கையேட்டில், கற்பவர்கள், கற்றுக்கொடுப்பவர்களுக்கிடையேயான உறவு, கேரியர் இம்புருவ்மென்ட் மற்றும் அட்வான்ஸ்மென்ட் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாது, சிபிஎஸ்இ, அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது, ஆசிரியர்கள், சிபிஎஸ்இயிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது உள்ளிட்ட ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர்களுக்கான கையேட்டில், தங்களது ஆசிரியப்பணியை மெருகேற்றிக்கொள்ளவதற்கான வழிமுறைகள், திட்டங்கள், பங்கு, ரெஸ்பான்சிபிலிட்டி, விருதுகள் உள்ளிட்ட வழிமுறைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
பணித்தேர்வு, தகுதி, ஆசிரியர்களுக்கான தன் மதிப்பீடு, அதற்கான கட்டமைப்பு, வாரியத்தேர்வுகள் தொடர்பான விபரங்கள், கற்பிக்கப்படும் பாடங்கள், தொழில்நுட்ப பயன்பாடு, பேரிடர் மேலாண்மை வழிமுறைகள், விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் ணுமுறை, ஆசிரியர்கள் பங்களிப்பிலான சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் உள்ள முக்கிய மற்றும் அதிமுக்கிய தகவல்கள் உள்ளிட்டவைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த கையேடுகளில், ஏதாவது சந்தேகங்கள் இருப்பின், cbseapp1920@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.