சி.பி.எஸ்.இ (CBSE) பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து தனிம வரிசை அட்டவணை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அறிவியல் பாடங்களை படிக்கும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் வேதியியல் பாடத்தில் எதிர்கொள்ளக்கூடிய சிரமம் குறித்து சி.பி.எஸ்.இ பள்ளிகளின் ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் NCERT பத்தாம் வகுப்பு வேதியியல் பாடத்தில் இருந்து தனிம வரிசை அட்டவணை பகுதி நீக்கப்பட்டது. இதனையடுத்து, வேதியியல் சிறந்த கற்றல் தெளிவை பெற தனிம வரிசை அட்டவணையை மாணவர்கள் படிப்பது அவசியம் என்று எடுத்துரைக்கும் கல்வியாளர்கள், நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய ‘வாட்டர் பெல்’; புதுச்சேரி பள்ளிகளில் புதிய முயற்சி
இதனிடையே, தனிம வரிசை அட்டவணை நீக்கப்பட்டது, சி.பி.எஸ்.இ வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில், தேசிய அளவில் மற்ற இரண்டு வாரியங்களான மத்யமிக் மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ வாரியங்கள் தனிம வரிசை அட்டவணையைத் தொடர்ந்து கற்பிக்க உள்ளதால், இது சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், இன்று உலகின் மிக முக்கியமான பிரச்சனைகளான நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் வளங்கள் பற்றிய அத்தியாயங்களை நீக்குவதும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது. NCERT முன்பு சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை 9 மற்றும் 10 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கியது.
இதுபோன்ற முக்கியமான அத்தியாயங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு நீண்ட கால அளவில் பிரச்சனையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் இந்த பகுதிகள் ஒவ்வொன்றும் அந்தந்த பாடங்களின் மைய கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொல்கத்தாவை தளமாகக் கொண்ட இயக்கமான பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டி மூலம் 4,500 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், அறிவியல் தொடர்பாளர்கள் நீக்கப்பட்ட பாடங்களை மீட்டெடுப்பதற்கான மேல்முறையீட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
தனிம வரிசை அட்டவணையை நீக்கும் NCERT இன் முடிவு, தனிம வரிசை அட்டவணையில் ஒன்றோடொன்று சார்ந்திருக்கும் வேதியியலில் பல்வேறு தலைப்புகளைக் கற்றுக்கொள்வதில் மாணவர்களைப் பாதிக்கும். இந்த முடிவு மாணவர்களுக்கு வேதியியலின் அடிப்படைக் கருத்துகளைப் பற்றிய அறிவை இழக்கச் செய்யும், என்று கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil