நேற்றைய தினம் (டிச 6) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் 28 ஜவஹர் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்காக ரூ. 8,231 கோடி ஒதுக்கீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மத்திய அரசின் பள்ளிகளை விரிவாக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரில் அதிகபட்சமாக 13 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. இதனிடையே, அருணாச்சல பிரதேசத்தில் அதிகபட்சமாக 8 ஜவஹர் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Central school push: 85 new Kendriya Vidyalayas, 13 in J&K; 28 Navodayas, N-E focus
மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடைய குழந்தைகளின் கல்வியை கருத்திற்கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. மற்றொருபுறம், ஜவஹர் நவோதயா பள்ளிகள் ( 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை), கிராமப்புற மாணவர்களின் திறனை வலுப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டவை.
புதிதாக தொடங்கப்படவுள்ள பள்ளிகளை தவிர்த்து தற்போது, 1,256 கேந்திரய வித்யாலயா பள்ளிகளும், 653 ஜவஹர் நவோதயா பள்ளிகளும் செயல்பாட்டில் உள்ளன.
அடுத்த 8 ஆண்டுகளில் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் நிறுவுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் 2025-26 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்படுகின்றன. அதே சூழலில், 2024-25 முதல் 2028-29 வரை ஐந்து ஆண்டுகளில் 28 ஜவஹர் நவோதயா பள்ளிகளையும் செயல்பாட்டில் கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஏறத்தாழ இப்பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 6,600 பணியிடங்களை உருவாக்க இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி இருந்தாலும், அவற்றை நிறுவுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கான காரணம் குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் விவரித்துள்ளார். “தேவையின் அடிப்படையிலேயே புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உருவாக்கப்படுகின்றன. அதன்படி, புதிதாக பள்ளிகள் தொடங்கப்படவுள்ள பகுதியில் குறைந்தபட்சம் 500 மத்திய அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் வசிக்க வேண்டும். ஜம்மு & காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டுள்ள ஏராளமான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்தினரை கருத்திற்கொண்டு அப்பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. உதாரணமாக ஆந்திர பிரதேசத்தில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளி தொடங்கவுள்ள மாவட்டத்தில் வருவாய் துறையின் சார்பாக புதிதாக பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு & காஷ்மீரை தவிர்த்து மத்திய பிரதேசத்தில் 11 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், ராஜஸ்தானில் 9 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், ஆந்திர பிரதேசத்தில் 8 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், ஒடிசாவில் 8 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் நிறுவப்படவுள்ளன.
“ஜவஹர் நவோதயா பள்ளிகளை பொறுத்தவரை வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூரில் அதிகபட்சமாக தொடங்கப்படவுள்ளன. பிராந்தியத்தின் எல்லை பகுதிகளில் இப்பள்ளிகளை அதிகளவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த வகையில் அசாமில் 6 ஜவஹர் நவோதயா பள்ளிகளும், மணிப்பூரில் 3 ஜவஹர் நவோதயா பள்ளிகளும், அருணாச்சல பிரதேசத்தில் 3 ஜவஹர் நவோதயா பள்ளிகளும் அமைக்கப்படவுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.