மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரண்டு தாள்கள் கொண்ட இந்த தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ) ஆண்டுதோறும் ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: CTET 2024 exam date revised to December 15
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. சிடெட் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் உட்பட 20 மொழிகளில் நேரடிமுறையில் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு டிசம்பர் பருவத்துக்கான சிடெட் தேர்வு டிசம்பர் 1-ம் தேதி நாடு முழுவதும் 136 நகரங்களில் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையை சி.பி.எஸ்.இ தற்போது வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் https://ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம், தேர்வு வழிமுறைகள், பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சிடெட் தேர்வுக்குத் தகுதிபெற, ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நபரின் பாடத்தைப் பொறுத்து, மூத்த இரண்டாம் நிலை அல்லது பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் சிடெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு தாளுக்கு ரூ 1,000 மற்றும் இரண்டு தாள்களுக்கு ரூ 1,200 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவு கட்டணம் ஒரு தாள் தேர்வுக்கு ரூ 500 ஆகும். இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.600 ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“