நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9,86,585 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப மாநில அரசுகளிடம் பேசுமாறு, மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 11 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் கல்வி, மகளிர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைகளின் நிலைக்குழு ஒரு முக்கியமான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இதையும் படியுங்கள்: 13 பல்கலைக் கழகங்களில் 1265 ஆசிரியர் காலி பணியிடங்கள்; நியமனம் எப்போது?
பா.ஜ.க எம்.பி.யான விவேக் தாக்கூர் தலைமையிலான இந்த நிலைக்குழு நாடு முழுவதும் 2022 - 23 கல்வியாண்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் மீது மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதில், '2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் உள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் 62,72,380. இவற்றில் 9,86,585 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாகி நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றில் துவக்கப்பள்ளிகளில் 7,47,565 காலியிடங்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 1,46,334 காலியிடங்களும் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 92,666 பணியிடங்களும் உள்ளன.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் மீது தனது கருத்துக்களை முன்வைத்த நாடாளுமன்ற நிலைக்குழு, 'இவற்றை உடனடியாக நிரப்பினால்தான் மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையின்படி 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் சதவீதத்தை விரைந்து அமலாக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளது.
இந்த ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலான மாநிலங்களில் வெளிப்படையாக இல்லை. இதை சரிசெய்ய, ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்து நியமிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மாநில அரசுகள் அமைக்க வேண்டும்’ என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு, கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது சம்மந்தப்பட்ட அரசுகளின் கடமை என மத்திய அரசு கூறியிருந்தது. இதை ஏற்க மறுத்த நாடாளுமன்ற நிலைக்குழு, ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கூறி அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு பேச வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
எனவே, இந்த அறிவுறுத்தலை ஏற்று மத்திய கல்வித் துறை சார்பில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களை அழைத்து பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்து கடந்த வாரம் தி.மு.க எம்.பி.,யான டி.ரவிகுமார் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சரான அன்னபூர்ணா தேவி, தமிழகத்தின் அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மொத்தம் 1,44,968 அதில் 1,43,215 நிரப்பப்பட்டவை, 1753 இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil