மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் 60க்கும் மேற்பட்ட பெரிய தனியார் மருத்துவமனைகளை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குமாறு வலியுறுத்தினார், இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 மருத்துவமனைகள் இந்தக் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்துள்ளன.
2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் தற்போது 654 ஆக அதிகரித்து 69 சதவீதம் உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் சமீபத்தில் தெரிவித்தார். நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கையையும் அரசு உயர்த்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் படிப்பை 9 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்; தேசிய மருத்துவ ஆணையம்
மேலும், MBBS இடங்களின் எண்ணிக்கை 51,348 இலிருந்து 99,763 ஆக அதிகரித்து 94 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் முதுகலை (PG) இடங்களின் எண்ணிக்கை 2014 க்கு முன் 31,185 ஆக இருந்த நிலையில், தற்போது 64,559 ஆக உயர்ந்து 107 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் கிடைக்கும் 8,195 இளங்கலை இடங்களைச் சேர்த்து, நாட்டில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 1,07,658 ஐத் தாண்டியுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவக் கல்விக்காக தனியார் மருத்துவமனைகளை நாடுவதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனை காகிதத்தில் நன்றாக இருந்தாலும், இந்த புதிய அறிவிப்பு குறித்து நிபுணர்கள் இருவேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் சொந்தமாக மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவது, நாட்டில் மருத்துவக் கல்வியின் தரம் குறைவதற்கு வழிவகுக்கும் என்று அகில இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (FAIMA) தலைவர் டாக்டர் ரோஹன் கிருஷ்ணன் கருதுகிறார். “மருத்துவக் கல்லூரிகளை அதிக இடங்களுடன் திறப்பதை விட மருத்துவக் கல்வியின் தரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். தரமான கல்வியை வழங்க, எங்கள் தனியார் மருத்துவமனைகளில் தற்போது இல்லாத ஆசிரிய நிபுணர்கள் தேவை,” என்று அவர் indianexpress.com இடம் கூறினார்.
“இந்த மருத்துவமனைகளில் ஆலோசகர்கள் மற்றும் இணை ஆலோசகர்கள் மட்டுமே உள்ளனர், மருத்துவக் கல்வியின் மிக முக்கியமான அம்சங்களான கற்பித்தல், ஆராய்ச்சி, ஆய்வறிக்கைகள், வழிகாட்டுதல்கள், மருத்துவக் கற்பித்தல், படுக்கை சார்ந்த கற்பித்தல், ஆய்வகக் கற்பித்தல் போன்றவற்றைப் பற்றி அறிந்த எவரும் இல்லை. எம்.பி.பி.எஸ் பட்டதாரிகளை மட்டும் உருவாக்காமல், தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும்,” என்று டாக்டர் கிருஷ்ணன் கூறினார்.
மறுபுறம், குர்கானில் உள்ள சி.கே பிர்லா மருத்துவமனையின் மார்பக மையத்தின் முன்னணி ஆலோசகர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் ரோஹன் கண்டேல்வால், இது ஒரு நல்ல படியாக இருக்கும் என்று கருதுகிறார். எவ்வாறாயினும், அத்தகைய நிறுவனங்கள் அல்லது மருத்துவமனைகள் கல்லூரி தொடங்க விரும்பினால் "இந்த தனியார் மருத்துவமனைகள் எந்த வகையான நோயாளிகளின் எண்ணிக்கை அளவைப் பார்க்கின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கத் தேவையான வசதிகள் இருந்தால் அவை கடுமையான அளவுகோல்களைக் கொண்டிருக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார்.
இருப்பினும், அமிர்தா மருத்துவமனை, ஏற்கனவே தனது கொச்சி கிளையில் படிப்புகளை நடத்தி, இப்போது அதன் ஃபரிதாபாத் கிளையில் மருத்துவப் படிப்புகளைத் தொடங்குகிறது, கல்வியின் தரம் அரசாங்க வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை நிறுவனம் உறுதிசெய்கிறது. ”பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நிறுவிய உள் தர உறுதிப் பிரிவு (IQAC) செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலமும், NAAC தரநிலைகளின் அடிப்படையில் தொடர்ச்சியான தர உத்தரவாதத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமும் நாங்கள் படிப்புகளில் தரக் கட்டுப்பாட்டைப் பேணுகிறோம்," என்று அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நிறுவனத்தின் மருத்துவ அறிவியல் தலைவர் டாக்டர் பிரேம் குமார் கூறினார்.
தரத்திற்கு அடுத்தப்படியாக, நிபுணர்கள் மற்றும் மாணவர்களை கவலையடையச் செய்வது மருத்துவக் கல்விக்கான செலவு அதிகரித்து வருவது தான். “தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலிக்கும் அதிகப்படியான கட்டணம் மாணவர்களின் ஆர்வத்தை தடுக்கிறது. எனவே மருத்துவக் கல்வியில் இரண்டு முக்கியமான விஷயங்களில் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும், ஒன்று மலிவான கட்டணம் மற்றும் இரண்டு அடிப்படை வசதி, உபகரணங்கள் மற்றும் மருத்துவ கவுன்சில் அல்லது தேசிய மருத்துவ ஆணையத்தின் குறைந்தபட்ச தர வழிகாட்டுதல்களைப் பராமரித்தல். தரம் மற்றும் மலிவான கட்டணத்தில் ஒருவர் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது,” என்று டாக்டர் கிருஷ்ணன் கூறுகிறார்.
இந்த புதிய முயற்சியின் மூலம் மாணவர்கள் பெறக்கூடிய நன்மைகளில் ஒன்று, அவர்கள் பட்டம் பெற்றவுடன், மருத்துவத் துறையில் வேலை தேடுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள். “நிறுவனத்தில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அமிர்தா மருத்துவமனையில் பணியமர்த்தப்படும் போது முன்னுரிமை பெறுவார்கள். ஏனென்றால், ஒவ்வொரு மாணவரின் பலம் மற்றும் திறன்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு நன்றாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர்களுக்கு நன்கு தெரியும். இதன் விளைவாக, மாணவர்கள் பணியமர்த்தப்படும்போது, அவர்கள் விரைவாக மருத்துவர்கள் குழுவில் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள், மேலும் தேவையான எந்தவொரு பயிற்சிக்கும் ஒரு குறுகிய கற்றல் வளைவு உள்ளது. இது முதல் நாளிலிருந்தே அவர்கள் சிறந்த மருத்துவம் அளிப்பதை உறுதி செய்கிறது" என்று டாக்டர் நாயர் விளக்குகிறார்.
மருத்துவமனை வளாகங்களில் மருத்துவ மாணவர்களைக் கொண்டிருப்பது மருத்துவமனையின் பணியாளர்களை மேம்படுத்தவும் தினசரி பணிச்சுமையை பராமரிக்கவும் உதவுகிறது, என்று டாக்டர் நாயர் கூறினார். “எங்கள் கொச்சி கிளை மருத்துவமனைகளின் தினசரி வேலைகளை பராமரிக்கும் அதேவேளையில் படிப்புகளை நடத்துவதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளவில்லை. உண்மையில், படிப்புகள் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும் மற்றும் மூத்த மாணவர்கள் இளையவர்களுக்கு வழிகாட்ட முடியும். படிப்புகளை நடத்தும் போது மருத்துவமனையின் செயல்பாடுகளில் எந்தப் பிரச்சினையும் தெரிவிக்கப்படவில்லை,” என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.
(தேசிய மருத்துவ ஆணையம் கருத்துக்கான கோரிக்கைக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.