தேர்வன்
இந்தியாவில் 15 முதல் 29 வயதுடைய 21 மில்லியன் ( ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ) மக்கள் தற்போது வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். பொருளாதார மந்தநிலையால் வேலை வாய்ப்பு உருவாக்கப் படவில்லை என்றாலும், இந்த வயதுடைய மக்கள் பெரும்பாலும், ஏதேனும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வருவதால், வேலைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர் என்ற கருத்தும் நிலவுகிறது.
ஒவ்வொரு தேர்வும், அதை எழுதும் தேர்வர்களும் வித்தியாசமானவர்கள். ஆனால், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும், தேர்வர்களுக்கும் மூலதனமாக விளங்குவது நமது மூளையும் அது தரும் ஞாபகங்களும். எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது ? படித்ததை எப்படி தேர்வுத் தாளில் பிரதிபலிப்பது ? நமது மூளை இயல்பாக எவ்வளவு ஞாபகங்களைத் தாங்கும்? இன்னும் அதிகமாக மனப்பாடம் செய்வது எப்படி? என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்க உள்ளோம்.
சென்சரி மெம்மரி: நாம் உணர்வதால் ஏற்படக்கூடிய நியாபகத்துக்கு சென்சரி மெம்மரி என்று பொருள். அழகான/அழகற்ற பொருட்களை பார்த்ததற்குப் பின் , தொடுதலை உணர்ந்ததற்குப் பின், உணவுகளை சுவைத்தப் பின்..... அதன் நியாபகங்கள் நம் மனதில் பதியும். இந்த உணர்வால் வரும் நியாபகங்கள் ஒருவரின் மனதில் ஐந்து நொடி வரைதான் தங்கும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. ஆனால், அதற்குள் இது நம் மனதில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த வகையான உணர்வு ரீதியான ஞாபகங்களே ஒரு மனிதனை வெற்றிக்கும்/ தோல்விக்கும் வழிவகுக்கின்றன. ஆங்காங்கே, நாம் உணர்வதைத் தான் நமது மூலம் நீண்டகால ஞாபகங்களாக மாறுகிறது.
எனவே, படிக்கும் போது நமது படிப்பு அதிகப்படியான/ பல தரப்பட்ட உணர்வுகளை நம் மனதில் ஏற்படுவதாய் அமைதல் வேண்டும். ஒரே, புத்தகத்தை நீண்ட நேரம் பார்ப்பதற்கு பதிலாக, வேறுவகையில் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த தயாராக வேண்டும்.
mnemonics
உதரணாமாக,லேப்டாப்பை எடுத்து மைக்ரோசாஃப்ட் பிரசன்டேஷன் மூலம் படித்தத்தை வெளிபடுத்தப் பாருங்கள், முக்கிய கணக்கை ( பார்முலாக்களை ) வாட்ஸ்ஆப்பில் ஸ்டேடஸாய் போடுங்கள், போட்டோஷாப் மூலம் வரலாற்று நிகழ்வுகளை போஸ்டர் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், கல்வித் தொடர்பான மீம்ஸ் எக்கச்சக்கமாய் நெட்டில் உலாவுகின்றன , நேரம் கிடைக்கும் போதெல்லாம் நோட்டமிடுங்கள், நினைவுக்குறியீட்டுக் ( mnemonics) கலையைக் கற்றுக் கொள்ளுங்கள், படித்ததை சந்தோஷமாய் பிறரிடம் பகிருங்கள்.
இன்றைய உளவியல் துறையில் பொமோடோரோ நுட்பம்( Pomodoro) என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது, படிக்கும் நேரத்தை 25 நிமிட துண்டுகளாக்குங்கள் ( சிட்டிங் டைம்). ஒவ்வொரு துண்டுகளுக்கும் ஐந்து நிமிட இடைவெளி விடுங்கள். இந்த இடைவெளிக்குப் பெயர் தான் போமோடோரோஸ். சுமார் நான்கு போமோடோரோக்களுக்குப் பிறகு, 15 முதல் 20 நிமிடங்கள் கொண்ட இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள்.
நான்கு மணி நேரம் தொடர்ந்து படிப்பதற்கு பதிலாக, இந்த பொமோடோரோ நுட்பத்தின் மூலம் இரண்டு மணி நேரம் தான் படிப்பீர்கள் . நேரம் வீணாகுகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாமே நமக்கு ஓய்வுக் கொடுத்து மீண்டும் அப்படிப்பைத் தொடங்குவதாலும், ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கு புதிதாய் திட்டமிட வாய்ப்புக் கிடைப்பதாலும் உணர்வு ரீதியாக நம் மனதில் அழுத்தங்கள் நீக்கப்படுகிறது.
படிப்பு என்பது ஒருவகையான உணர்வு. எனவே இந்தக் காலக் கட்டங்களில் படிப்பால் ஏற்படும் உணர்வையும், உணர்வால் தூண்டப்பட்ட படிப்பையுமே நாம் தேடவேண்டும்.