பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றுவதை போன்று போலியாக கணக்கு காண்பித்த இரண்டாயிரம் பேராசிரியர்களுக்கு தடை விதிக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும், 30 பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை நிறுத்தி வைத்து, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் விதிகளின் படி, பொறியியல் கல்லூரிகளில் 1:20 என்ற அடிப்படையில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், செலவினத்தை குறைக்கும் விதமாக பல கல்லூரிகளில் பேராசிரியர்கள் போலியாக பணியாற்றுவதை போன்று கணக்கு காண்பிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதன்படி, கடந்த 2023-24 கல்வியாண்டில் 353 பேர் பல கல்லூரிகளில் பணியாற்றுவது போன்று முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் தெரிவித்தது.
இதற்காக போலியான ஆதார் எண்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் மேற்கொண்ட விசாரணையில், இரண்டாயிரம் பேராசிரியர் பணியிடங்கள் போலியாக நிரப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஒரே பேராசிரியர் 32 கல்லூரிகளில் பணியாற்றுவதை போன்று கணக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 290 பொறியியல் கல்லூரிகள் மற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதில், 25 சதவீத பேராசிரியர்கள் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகினர். சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். "ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் எந்த விதமான நடவடிக்கையும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பு குழு இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - தி டைம்ஸ் ஆஃப் இந்தியா