தமிழகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருவதால், சிவில் சர்வீசஸ் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை எழுத மாணவர்களை தயார்படுத்துவதற்காக சென்னையில் உள்ள கல்லூரிகள் பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத ஆர்வம் குறைந்து வருகிறது. மேலும், கேம்பஸ் வேலை வாய்ப்புகளில் கவர்ச்சிகரமான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகியவற்றுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் தங்கள் வளாகங்களிலே சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளன.
நிபுணர்களை பணியமர்த்த, பயிற்சி மைய வசதிகளை ஏற்படுத்த, கல்வி உதவித்தொகை வழங்க மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பெயரளவு கட்டணத்தை கல்லூரிகள் வசூலிக்கின்றன. போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்க சில அரசு கல்லூரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையங்களுடன் இணைந்துள்ளன என TOI செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை கிறிஸ்டியன் கல்லூரி தாம்பரத்தில் உள்ள அதன் வளாகத்தில் எம்.சி.சி ஐ.ஏ.எஸ் அகாடமியின் துணை மையத்தை தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தில் சுமார் 30 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பதற்காக விடுதி மாணவர்களுக்கு தளர்வு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்துள்ளோம். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆதரிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். கல்விச் சுமையைக் குறைப்பதற்காக அவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இதுபோன்ற பயிற்சியை ஒருங்கிணைக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம். கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் நிபுணத்துவ பயிற்சியாளர்களை அழைத்துள்ளோம் என சென்னை கிறிஸ்டியன் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரி சில மாதங்களுக்கு முன்பு போட்டித் தேர்வுக்கான லயோலா இன்ஸ்டிடியூட் ஒன்றைத் தொடங்கியுள்ளது. 2027 முதல் கல்லூரியில் இருந்து அரசு ஊழியர்களை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். இந்த ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு மூன்று ஆண்டு அடிப்படைப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளோம். சிவில் சர்வீசஸ்களுக்கான தயாரிப்பை மாணவர்கள் முதலாம் ஆண்டிலிருந்தே தொடங்கலாம். வாரந்தோறும் மூன்று நாட்கள் வகுப்புகள் நடக்கும். கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறோம். வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் UPSC தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர், என்று போட்டித் தேர்வுக்கான லயோலா இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எத்திராஜ் மகளிர் கல்லூரி கடந்த சில ஆண்டுகளாக இதே போன்ற சிவில் சர்வீசஸ் கோச்சிங் திட்டத்தை மாணவர்களுக்கு நடத்தி வருகிறது. சொந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு UGC NET மற்றும் SLET தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
நந்தனத்தில் உள்ள ஆண்களுக்கான அரசு கலைக் கல்லூரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்துடன் இணைந்து மாணவர்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கான பயிற்சியை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வுகளுக்கும் இதேபோன்ற பயிற்சித் திட்டங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம், என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.