சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும் டிப்ளமோ மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப (DMLT) படிப்பை படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அருமையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் இந்த டிப்ளமோ படிப்பை படிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப் படிப்பு (Diploma in Medical Laboratory Technology) பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.
கல்வித் தகுதி
இந்த டிப்ளமோ படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (அல்லது) இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் (அல்லது) வாழ்க்கை தொழில் கல்விப்பிரிவு மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் தொழிற்பயிற்சி ஆகிய பாடங்கள் கொண்டு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி
31.12.2024 தேதி அன்று 17 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்கள் 37 வயது வரை இருக்கலாம்.
மொத்தம் 30 இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். மாதம் ரூ.700 கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும்.
இப்பயிற்சியின் சேர்க்கைக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ”இயக்குநர் (பொ) தொற்றுநோய் மருத்துவமனை எண்.187 திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081” என்ற முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் 12.03.2025 முதல் 21.03.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் 21.03.2025 மாலை 5 மணிக்குள் அலுவலலகத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. குறைந்த கட்டணத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் டிப்ளமோ படிப்பை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.