அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 5 மாணவர்களிடம் வசூலித்த ரூ.2.76 கோடி நன்கொடையை மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் மாணவர் தேர்வுக்குழு செயலாளர் பெயரில் கணக்கு துவங்கி டெபாசிட் செய்ய வேண்டும் என மாங்காடு தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாங்காடு அருகே உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டில் முறைகேடாக 9 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் 5 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெற்றனர். அவர்களிடம் கல்லூரி நன்கொடையாக ரூ.2.76 கோடி வசூலித்துள்ளது. மருத்துவ கல்லூரி இயக்குனரக தேர்வுக்குழுவால் அந்த மாணவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படாத நிலையில், சேர்க்கை நடைபெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்: NEET Counseling Registration 2023: அரசு கோட்டா, மேனேஜ்மென்ட் கோட்டா… நீட் கவுன்சலிங் பதிவு செய்வது எப்படி?
பின்னர் அந்த மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், எம்.பி.பி.எஸ் படிப்பை முடிக்க அனுமதிக்கக் கோரி ஒன்பது மாணவர்களில் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது கல்லூரி நிர்வாகம் நன்கொடை பெற்றதை மறுத்தப்போது, ஐந்து மாணவர்களின் பெற்றோர்கள் எந்த ரசீதும் இல்லாமல் மூலதனக் கட்டணம் செலுத்தியதை உறுதி செய்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களைக் கருத்தில் கொண்டு, சி.பி.சி.ஐ.டி விசாரணையை சந்திக்க நேரிடும் என்று கல்லூரிக்கு நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், முறைகேடாக சேர்க்கை பெற்றதால், பெற்றோர்கள் மூலதனக் கட்டணத்தைத் திரும்பப் பெற உரிமை இல்லை என்று நீதிபதி கூறினார். இருப்பினும், மாணவர்கள் ஏற்கனவே நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்திருந்ததால், அவர்களின் படிப்பை முடிக்க நீதிபதி அனுமதித்தார்.
ஐந்து பேரின் பெற்றோரிடம் இருந்து எந்த ரசீதும் வழங்காமல் தனிக் கணக்கில் வசூலித்த ரூ.2.76 கோடியை, 2019 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 6% வட்டியுடன் மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக் குழுவின் செயலாளரும், இயக்குனரகமும் இணைந்து தொடங்கும் தனிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும், அதனை 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் சேர்க்கப்படும் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப் பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், 2019ல் விதிகளை மீறி ஒன்பது மாணவர்களை அனுமதித்த தனியார் கல்லூரி மீது தேவையான நடவடிக்கை எடுக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு நீதிபதி பரிந்துரைத்தார். மேலும், அந்த ஒன்பது மாணவர்களில் ஐந்து பேர் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனுமதியின்றி அனுமதிக்கப்பட்டதால், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஐந்து இடங்களை இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்புமாறு கல்லூரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.