இடைக்கால உத்தரவை மீறி 100 சதவீத கட்டணம் வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்தபடுத்திய ஒன்பது பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியார் பள்ளி கல்விக் கட்டணம் தொடர்பாக, தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ," பள்ளிகள் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், 40 சதவீத கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்றும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிட்டது.
35 சதவீத கட்டணம் இரண்டு மாதத்திற்குப் பிறகு வசூலித்துக் கொள்ளலாம் என்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தனது இடைக்கால உத்தரவில் குறிபிட்டார்.
மேலும், கட்டண உத்தரவை மீறிய பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டதாகவும், அதில், 97 பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. ஐந்து பள்ளிகளிடம் இருந்து, பதில் வர வேண்டியுள்ளது என்று விளக்கமளித்தார்.
கோவை பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி , ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி டான் பாஸ்கோ பள்ளி; ராமநாதபுரம் முஸ்லிம் மேல்நிலைப பள்ளி; விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எச்.என்.வி., பள்ளி. விருதுநகர் பி.எஸ்.சிதம்பர நாடார் பள்ளி; சாஸ்திரிய வித்யசாலா மெட்ரிக் பள்ளி; சாஸ்திரிய வித்யசாலா மேல்நிலை பள்ளி; சென்னை அம்பத்துார் உசைன் நினைவு மெட்ரிக் குலேஷன் பள்ளி; திருவொற்றியூர் ஸ்ரீ சங்கரா வித்யா கேந்திரிய மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய 9 பள்ளிகள் இடைக்கால உத்தரவை மீறியதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
9 பள்ளிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான முகாந்திரம் போதுமானதாக இருப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
இது தவிர, சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டணம் மீறல் தொடர்பான புகார்களை அனுப்ப , புதிய மின்னஞ்சல் கணக்கைத் திறக்குமாறு நீதிபதி சிபிஎஸ்இ வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil