கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகாரில் மாணவர் உதித் சூர்யா உட்பட 27 பேரை குற்றவாளிகளாக சேர்த்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 27 ஆவது குற்றவாளியாக உள்ள தருண்மோகன் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வில் இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு முக்கியமான கட்டத்தில் உள்ளதாகவும், இந்த மோசடியில் மனுதாரர் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், தேசிய தேர்வு முகமையிடம் ஆள்மாறாட்ட புகார் தொடர்பான விவரங்களை முறையாகக் கேட்டும் பதில் தரவில்லை என்பதால், வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் தீவிரமான குற்றச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, தேசிய தேர்வு முகமையை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, ஆள்மாறாட்டம் தொடர்பான புகாருக்கு உரிய விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனையடுத்து இறுதி உத்தரவுக்காக இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“