தமிழ்நாட்டில் அரசு பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவர்களுக்கும் உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு வேலை வாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால், அதை மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமானது என்று இருந்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை ஆங்கில வழியில் படித்தவர்கள், பின்னர் தமிழ் வழியில் ஏதேனும் ஒரு டிகிரியை படித்துவிட்டு, இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற பிரச்னை எழுந்தது.
இதனையடுத்து, 2020 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் குறிப்பிட்ட பதவிக்கான அடிப்படை தகுதி படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தச் சட்டத்தின் படி, ஒன்றாம் வகுப்பு முதல் குறிப்பிட்ட பதவிக்கான தகுதி படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டும்தான் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பணியை கோர முடியும். அதாவது பட்டப்படிப்பு தகுதி என்றால் ஒன்று முதல் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
இருப்பினும் தமிழ் வழிக்கல்விக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு, தனித்தேர்வர்களுக்கு பொருந்தாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சத்தியா என்பவர் தொடர்ந்தார். 2022 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி-யின் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்விற்கு சத்தியா விண்ணப்பித்தார். தேர்வில் வெற்றி பெற்ற சத்தியா திருப்பூரில் ஊரக வளர்ச்சித் துறை உதவியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சத்தியா தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் தனது பெயரை சேரக்கக் கோரினார். ஆனால், சத்தியா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை குடும்ப சூழ்நிலையின் காரணமாக தனித்தேர்வராக எழுதியதால், இட ஒதுக்கீடு அவருக்கு மறுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சத்தியா வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரரான சத்தியா 11 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பள்ளியில் படித்ததும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் தனித்தேர்வராக தமிழ் வழியில் எழுதியதும் தெரியவந்தது.
மேலும், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழையும் சத்தியா பெற்றுள்ளார். எனவே, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் உரிமை பெற அவருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பணி நியமனத்திற்கான உத்தரவை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.