அரசுப் பணிகளுக்கான தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது.
இந்தநிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற நிலையிலும், தன்னை தேர்வு செய்யவில்லை எனக் கூறி திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய உத்தரவிட்டது.
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தேர்வாணையம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது வந்தப்போது, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, நீதிமன்றத்தில் தவறான தகவல் வழங்கியதாக கூறி, சம்பந்தப்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தேர்வாணையத்தின் இணைச் செயலாளர் பிரான்சிஸ், துணைச் செயலாளர் ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் சிவகுமார், பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் இன்றைய விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட மனுதாரரை தேர்வு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
மேலும், மேற்கண்ட நான்கு அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை சட்டப்படி விசாரித்து முடித்து 4 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்வாணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுபோன்ற தேர்வு நடைபெறும் ஏற்படும் குளறுபடிகளை கண்டறிய ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்குழு தனது விசாரணையை முடித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடைமுறைகளை வகுத்து பரிந்துரைக்க வேண்டும் என்றும், இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“