/indian-express-tamil/media/media_files/2025/01/12/xqDkvQghxXQQMUics0Z7.jpeg)
உயர் கல்வி சேர்க்கை விகிதம் புள்ளி விவரங்கள் அடிப்படையில், நமது நாடு 27% சதவீதம் மட்டுமே இருப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாட்டில் உயர்கல்வி படித்தவர்களே இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என சென்னை ஐ.ஐ.டி.இயக்குனர் காமகோடி கவலை தெரிவித்தார்.
கோவையில் (தனியார்) கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர் இராமகிருஷ்ணா மடம் மற்றும் சுவாமி விவேகானந்தா கல்வி நிலையம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான மாநாடு கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.
இதில் சுவாமி நரசிம்மானந்தா ஜி.விமுர்த்தானந்தா ஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் சவால்களை எதிர் கொள்வதில் சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கை இளைஞர்கள் சமுதாய மாற்றத்தின் முக்கிய தூண்கள் என இளைஞர்களின் முன்னேற்றங்களுக்கான தேவையான கருத்துக்கள் தொடர்பாக முக்கிய விருந்தினர்கள் உரையாற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பேராசிரியர் முனைவர் காமகோடி இளைஞர்களிடையே உரையாடினார்.
அப்போது காமகோடி பேசியதாவது, “இன்றைய இளம் மாணவர்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் செயல்களும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். மேலும் உயர் கல்வி சேர்க்கை விகித புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழகம் 50% சதவீதமாக இருக்கிறது. அதே நேரம் நமது நாட்டில் 27% சதவீதம் மட்டுமே இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாட்டில் உயர்கல்வி படித்தவர்களே இல்லாத நிலை ஏற்பட்டு விடும்.
இளம் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊர்களில் உள்ள பள்ளி பருவத்தை முடித்த மாணவர்களை உயர் கல்வி பயில அறிவுறுத்தி கல்லூரிகளில் சேர்த்து விடுவதை ஒரு கடமையாக கருதி செய்ய உறுதி ஏற்க வேண்டும். இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நாட்டில் உயர்கல்வி படித்தவர்களின் சதவீதம் உயர்த்துவதே முதல் படி.
மேலும் இந்திய நாட்டின் அனைத்து விதமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டு உற்பத்தி அவசியம். வெளிநாட்டினரின் தேவை இல்லாமல் நமக்கு நாமே என்ற நிலை அவசியம். நவீன தொழில் நுட்பங்களை நாமே உருவாக்கி தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு இனி இளைஞர்கள் தயாராக வேண்டும்,” என்று காமகோடி கூறினார்.
தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.