சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி-மெட்ராஸ்) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தும் புதுதிட்டத்தை இன்று துவக்கியது.
‘பெண்கள் முன்னணி வகிக்கும் ஐஐடிஎம்’ என்ற திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் பெண்களின் திறமையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணிகளில் பெண்களின் எண்ணிகையை 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்துவதும், அனைத்து ஆசிரியர் நியமனங்களில் 30 சதவீத விழுக்காடு இடங்களை பெண்களை நியமிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கம் என சென்னை ஐஐடி தெரிவித்தது.
மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தன்று திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
“2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை நிதியாக திரட்டப்படும். மாணவிகள் , ஆசிரியைகள், பெண் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் கல்வித் திட்டங்களுக்கு ஆதரவாக வருடாந்திர மானியம் வழங்கப்படும். இந்த ஆண்டில் மட்டும், ரூ .70 லட்சம் நிதியுதவியை பகிர்ந்து அளிக்க நோக்கமாக கொண்டுள்ளோம்” என சென்னை ஐஐடி தெரிவித்தது.
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், “, யுஜி மட்டத்திலிருந்து முனைவர் திட்டம் வரை ஐ.ஐ.டி மெட்ராஸில் பெண்களின் சதவீதத்தை அதிகரிப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் அளவிலும் இந்த போக்கு காணப்படுகிறது. மேலும், பேராசரியர் பணிகளில் உள்ள பாலின இடைவெளியை போக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம். அருமையான தருணத்தில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்படியும் ஐ.ஐ.டி-களின் பாலின விகிதத்தை மேம்படுத்துவதற்கும், ஐ.ஐ.டி-களின் பெண்களுக்கென 800 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டன. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ‘பெண் விஞ்ஞானிகள் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது அறிவியல், கணிதத் துறை வேலை வாய்ப்புகளில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது.