சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில், உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடக்கத்திலிருந்தே வேலைவாய்ப்பில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உள்ளமைப்பு பணியாளர்களில் 21 சதவீதம் பெண்களும், வெளி ஒப்பந்தத் பணியாளர்களில் 50 சதவீதம் பெண்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கையரையும் பணியமர்த்தியுள்ளது. . 2-வது கட்டத்தில் முழுமையாக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் மெட்ரோ இரயில் நிலையங்களை நிறுவுவதற்கான வாய்ப்புகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம், தகுதியும் அனுபவமும் வாய்ந்த பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சி, பொறியியல் பணியாளர்களிடையே பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.
வேலைவாய்ப்பு விவரம்
பதவி: உதவி மேலாளர் (சிவில்)
பணியிடங்களின் எண்ணிக்கை: 8
குறைந்தபட்ச அனுபவம்: 2 வருடங்கள்
அதிகபட்ச வயது: 30 (தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)
ஒருங்கிணைந்த ஊதியம்: மாதம் ரூ. 62,000/-
விரிவான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவத்தின் இணையதளத்தில் https://chennaimetrorail.org/job-notifications/ என்ற URL-ல் 10-01-2025 அன்று அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் பரிசீலனை செய்யப்படும். மேலும், விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதி 10-02-2025 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.