சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நந்தனம் பகுதியில் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல், அரசு ஆண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
தற்போது சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர், வடநெம்மேலி, பெரும்பாக்கம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர் பகுதிகளில் அரசு இருபாலர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருவதால் நந்தனம் ஆண்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
எனவே, 2024-25ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும், அப்பகுதி மாணவிகள் பெருமளவில் பயனடையும் வகையிலும், முதுநிலை மற்றும் முனைவர் பட்ட வகுப்புகளில் மாணவிகள் அதிக அளவில் சேர்க்கை பெற்று பயின்று வருவதன் அடிப்படையிலும், நந்தனம் ஆண்கள் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்ற கல்லூரி முதல்வர் கோரியுள்ளார்.
இதை கவனமுடன் தமிழ்நாடு அரசு ஆய்வு செய்தது.
இந்நிலையில், சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரியினை நடப்பு கல்வியாண்டு (2024-25) முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்தும், அக்கல்லூரியின் பெயரை நந்தனம் அரசு கலைக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்தும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆ.கார்த்திக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“