/indian-express-tamil/media/media_files/2025/10/11/snakebite-traditional-herbal-remedies-2025-10-11-09-07-23.jpg)
பாம்புக்கடிக்கு இனி மூலிகை மருந்து: இருளர் பாரம்பரிய வைத்தியத்தை அறிவியல்ரீதியாக ஆராயும் மெட்ராஸ் பல்கலை.
பாம்புக் கடிக்குச் சிகிச்சையளிக்கப் பழங்குடியின சமூகங்கள் பயன்படுத்தும் பாரம்பரிய மூலிகை வைத்தியங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்காக, சென்னை பாம்பு பண்ணைத் தொண்டு நிறுவனம் (Chennai Snake Park Trust), மெட்ராஸ் பல்கலைக்கழக விலங்கியல் துறை ஆகியவை இணைந்து 3 ஆண்டு ஆய்வைத் தொடங்கியுள்ளன.
இந்த ஆய்விற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், பழங்குடியினரின் அறிவையும் நவீன மருத்துவ ஆராய்ச்சிகளையும் ஒருங்கிணைத்து, விஷமுறி மருந்துகளுக்கு (antivenom) சிகிச்சையாகப் பயன்படுத்தக்கூடிய தாவர அடிப்படையிலான மருந்துகளின் திறனை ஆராய்வதாகும். உலகிலேயே அதிக பாம்புக்கடி மரணங்கள் இந்தியாவில் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடிச் சமூகங்கள், குறிப்பாக இருளர் சமூகத்தினர் பயன்படுத்தும் மூலிகைகளில் கவனம் செலுத்தும். விஷப்பாம்புகள் மற்றும் உள்ளூர் மருத்துவத் தாவரங்கள் குறித்து இருளர்கள் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருப்பதால், அவர்களுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆராய்ச்சியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகைகளிலிருந்து வேதியியல் சேர்மங்களைப் பிரித்தெடுத்து, ஆய்வகம் மற்றும் விலங்குகள் மூலம் அவற்றின் செயல்திறனைச் சோதிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் பழங்குடியின வைத்தியர்களுடன் இணைந்து பணியாற்றி, அவர்கள் மிகவும் ரகசியமாகக் காக்கும் மருத்துவ அறிவைப் பதிவு செய்வதுடன், அதற்கு நெறிமுறை சார்ந்த மற்றும் அறிவியல் பூர்வமான அங்கீகாரத்தை உறுதி செய்வதும் அடங்கும் என்று தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மூலிகை மருந்துகள் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டால், தற்போதுள்ள சிகிச்சைகளை இவை மேம்படுத்துவது உடன், பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீன சுகாதார அமைப்புகளில் ஒருங்கிணைக்க உதவும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.