திருக்குறள் போட்டி: 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் சென்னை மாணவர்களுக்கு பரிசு
ஆண்டுதோறும் திருக்குறளின் 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் 70 மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ .10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” எனும் திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் முற்றோதும் திறன்படைத்த சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisment
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " ஆண்டுதோறும் திருக்குறளின் 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் 70 மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ .10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றைக் குறித்து, கேள்வி கேட்டால் சொல்லும் திறன் பெற்றவராக இருந்தால் கூடுதல் சிறப்பு. திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
திருக்குறளின் பொருள் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
சென்னை மாவட்டத் துணை இயக்குநா் தலைமையிலான திறனறிக் குழுவினரால் திறனாய்வுச் செய்யப்பட்டு, தகுதியானவா்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
திருக்குறள் முற்றோதும் திறன்படைத்த மாணவ, மாணவியர்கள் தமிழ் வளர்ச்சி இயக்ககம் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், " முனைவா் தா. லலிதா, தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், தமிழ் வளா்ச்சி வளாகம், முதல் மாடி, தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை-8" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044 28190412, 044 28190413 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil