/indian-express-tamil/media/media_files/2025/06/14/Zxa1blonjuLzsr1LBm4v.jpg)
சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் படித்த இரண்டு மாணவர்கள் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) அட்மிஷன் பெற்று 52 ஆண்டுகளாக நீடித்த வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 52 ஆண்டுகளாக வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் இருந்து எந்த ஒரு மாணவரும் நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் இடம் பெறாத நிலையில், வேதியியல் துறையைச் சேர்ந்த சக வகுப்பு நண்பர்களான பிரதீப்.ஆர் மற்றும் சுடர்.கே ஆகிய இருவரும், ஒட்டுமொத்த கல்லூரிக்கும், வியாசர்பாடி பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் இருவரும் எந்தவொரு பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல், ‘ஜாயின்ட் அட்மிஷன் டெஸ்ட் ஃபார் மாஸ்டர்ஸ்’ (JAM) தேர்வில் வெற்றி பெற்று தனி சிறப்பையும் பெற்றுள்ளனர்.
பிரதீப் அகில இந்திய அளவில் 617வது இடத்தைப் பிடித்து ஐஐடி (IIT) திருப்பதியில் அட்மிஷன் பெற்றுள்ளார். என்.ஐ.டி (NIT) திருச்சியிலும் இடம் கிடைத்த போதிலும், எம்.எஸ்.சி (MSc) வேதியியல் படிக்க ஐஐடி (IIT)-யை தேர்வு செய்துள்ள பிரதீப், எதிர்காலத்தில் பி.எச்.டி (PhD) படிக்கும் திட்டத்தில் உள்ளார். அவரது தந்தை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பணியாற்றுபவர், தாய் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார், அவரது அண்ணன் ஒரு வழக்கறிஞர். கல்லூரி இறுதித் தேர்வில், பிரதீப் தனது கல்லூரியின் 10 அறிவியல் துறைகளிலும் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 70-80% கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்தே வந்தன. தேர்வு தயாரிப்பின் போது நான் குறிப்பு புத்தகங்களையும், வீடியோக்களையும் பயன்படுத்தினேன். ஆசிரியர்களிடம் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றேன். ஜே.ஏ.எம்.(JAM) தேர்வு பற்றி எனக்குத் தெரியாது; எங்கள் துறைத் தலைவர் தான் எனக்குத் தெரிவித்தார். இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற எங்கள் கல்லூரியின் முதல் நபர் நான் என்பது எனக்குப் பெருமை அளிக்கிறது என்று பிரதீப் கூறியுள்ளார்.
அதே சமயம், சுடர் 4,206 வது இடத்தைப் பிடித்து என்.ஐ.டி (NIT) பஞ்சாபில் அட்மிஷன் பெற்றுள்ளார். ஒரு ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் மகளும், இல்லத்தரசியின் மகளுமான சுடரின் சகோதரி இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ் (MBBS) படித்து வருகிறார். சுடர் தனது இளங்கலை பட்டப்படிப்பை எஸ்.சி (SC) கல்வி உதவித்தொகையுடன் முடித்துள்ளார். "எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு குறிப்பு புத்தகங்களை அளித்து ஆதரவளித்தனர். கல்லூரி நூலகமும் எங்களுக்கு போதுமான படிப்புப் பொருட்களை வழங்கியது என்று சுடர் கூறியுள்ளார். இவர் ஒரு பரதநாட்டியக் கலைஞரும் கூட.
வியாசர்பாடி பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருப்பதால், பெரும்பாலான மாணவர்கள் தங்கள் குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். "படிப்பைத் தொடரும் போது அவர்களின் முன்னுரிமை பகுதிநேர வேலைகளைச் செய்வதுதான். பட்டப்படிப்பு முடிந்த பிறகும், உயர் படிப்புகளைத் தொடர்வதை விட விரைவில் ஒரு வேலையைப் பெறுவதில் அவசரமாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.
இந்தச் சூழலில்தான் பிரதீப் மற்றும் சுடரின் சாதனை, கடின உழைப்பு மற்றும் சரியான வழிகாட்டுதல் இருந்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை உரக்கச் சொல்கிறது. இவர்களின் வெற்றி, வியாசர்பாடியின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.