/indian-express-tamil/media/media_files/2025/09/04/periyar-nagar-library-chennai-2025-09-04-17-23-56.jpg)
புதுப்பொலிவு பெறும் சென்னை நூலகங்கள்... டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு!
சென்னை வாசகர்களே, உங்களுக்கு குட்நியூஸ். இதுவரை அமைதியாக, புத்தக அடுக்குகளுக்குப் பின்னால் இருந்த நம் நகரின் நூலகங்கள், விரைவில் புதிய வடிவம் பெறவுள்ளன. வெறும் படிக்கும் இடங்களாக மட்டும் இல்லாமல், இளைஞர்களின் கனவுகளுக்குப் பாதை அமைக்கும் இடங்களாகவும், நவீன மையங்களாகவும் (co-working spaces) மாற உள்ளன.
சென்னையில் உள்ள 23 நூலகங்களைப் புதுப்பிக்கும் பணியை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாக, பெரியார் நகரில் உள்ள நூலகம் புதிய பரிமாணத்தை எட்டவுள்ளது. இனி வெறும் புத்தகங்கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மற்றும் யு.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்த மாவட்ட நூலக அலுவலர் எம்.கவிதா தெரிவித்துள்ளார். மேலும், இந்த நூலகம் முழுவதும் குளிரூட்டப்பட்டு, நவீன வசதிகளுடன் மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாற்றங்கள் ஒருசில நூலகங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அசோக் நகர், அண்ணா நகர், காந்தி நகரில் உள்ள நூலகங்களும் முழுமையாக குளிரூட்டப்பட்டு, காஃபி ஷாப்களுடன் இணைப்பணி மையங்களாக மாற உள்ளன. "போதுமான இடம் உள்ள நூலகங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுவதால், இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்" என்கிறார் பொது நூலகங்களின் இணை இயக்குநர் இளங்கோ சந்திரன்.
மேலும், நம் நகரின் நூலகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன என்ற கூடுதல் தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார். கடந்த ஓராண்டில், 60 நூலகங்களின் புதுப்பித்தல் பணிகள் 70% முடிவடைந்துவிட்டன. அதே சமயம், 95 ஆண்டுகள் பழமையான கோஷன் நூலகம், ஒரு பாரம்பரியக் கட்டிடம் என்பதால் அதன் பணிகள் சற்று மெதுவாக நடைபெறும்.
"இந்த நவீனமயமாக்கல், நூலகங்களுக்கு வரும் இளம் தலைமுறையினரை ஈர்ப்பதுடன், நமது நற்பெயரையும் உயர்த்தும்" என்று அண்ணா நகர் நூலகத்தின் நூலகர் ரங்கநாதன் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். "அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கூட எங்களைத் தேடி வருகிறார்கள்" என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.