சிவில் சர்வீஸ் தேர்வு 2019க்கான அறிவிப்பு, வழக்கத்தைவிட இம்முறை தாமதமாக UPSC வெளியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
UPSC மூலம் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உட்பட பல பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கிட்டத்தட்ட, 180 ஐஏஎஸ் பணியிடம் உட்பட 900 பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வுகள் ஜூன் 2ம் தேதி நடத்தப்பட வேண்டும். முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி அடைவோருக்கு, 29 செப்டம்பர் 2019ல் மெயின் தேர்வுகள் நடத்தப்படும். நாடு முழுவதிலும் இருந்து இத்தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பம் செய்வது வழக்கம்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பிப்.19, 2019ல் வெளியாக வேண்டும். ஆனால், சில காரணங்களால் அறிவிப்பு தாமதமாகலாம் என்று தெரிகிறது.
ஏன் தாமதம்?
சமீபத்தில், மத்திய அரசு கொண்டுவந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு, 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே, சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்த Notification வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த புதிய சட்டம் மூலம், 18 ஐஏஎஸ் இடங்களை பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க வேண்டியிருக்கிறது.
இதே போன்ற புதிய இட ஒதுக்கீடு சிக்கல், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணியிடங்களிலும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த புதிய சட்டத்தின் படி, புதிய கட் ஆஃப் முறையும் கொண்டு வர வேண்டிய சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
இது போன்ற காரணங்களால் 2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி அறிவிப்பில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.