முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக விமானம் மூலம் நேற்று திருச்சிக்கு வருகை தந்தார். கல்லணையில் இருந்து டெல்டா பகுதி விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த அவர், அதனைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டார்.
தஞ்சையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையம் வரும் வழியில், மிளகுபாறை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயின்று கிளாட் (CLAT) தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ரோகிணியைச் சந்தித்தார். அவருக்கு சால்வை அணிவித்து, தனது கையில் இருந்த பேனாவை பரிசாக அளித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர், "சாதனைகள் பல படைத்திடும் நமது திராவிட மாடல் திட்டங்களுக்கு கையெழுத்திட்ட எனது பேனாவை, மாணவியிடம் பரிசாகக் கொடுத்து, சாதனைகள் பல படைத்திட வேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன்," எனக் கூறினார்.
பேனா பரிசை பெற்றுக் கொண்ட மாணவி ரோகிணி கூறுகையில், "நான் முதல்வன் திட்டம் மூலமாக பயிற்சி பெற்று இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததுடன், தனது பேனாவை பரிசளித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது," என்று தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்