பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் தனியார் கல்லூரி இணைந்து அகாடமி எக்ஸலென்ஸ் 2023 விருது வழங்கும் விழா ஈச்சனாரி அருகில் உள்ள ரத்தினம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரத்தினம் கல்வி குழுமம் முதன்மை செயல் அதிகாரி மாணிக்கம் மற்றும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விருது வழங்கும் விழாவில் மாணவ - மாணவிகளை உயர்ந்த நிலைக்கு அடைய தங்களது பணியை சிறப்பாக செய்து வரும் கோவை மாவட்ட அரசு பள்ளி,மாநகராட்சி பள்ளி, மெட்ரிகுலேஷன், அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அகாடமி எக்ஸலென்ஸ் அவார்டு 2023 என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகராட்சி பள்ளிகளின் முதன்மை கல்வி அலுவலர் செல்வம் பேசுகையில், தொடர்ந்து மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தி 100 சதவீத தேர்ச்சியை பெற்று தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மாணவர்கள் சமீபகாலத்தில் தீய பழக்கவழக்கங்களை மிக எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். அப்படி இருக்கும் சூழ்நிலையில் மாணவர்களை நூற்றுக்கு, நூறு சதவீதம் தேர்ச்சி பெற வைத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் எவ்வித ஐயமில்லை என்றார்.
மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் தங்களது பணிகளை தொடர்ந்து திறம்பட செய்யுங்கள் எனவும், ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை என்றும் திறம்பட செய்யும் எனவும் தெரிவித்தார்.
விருது வாங்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் பேசுகையில், ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை 100"சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கியும், பாராட்டு சான்றிதழ் வழங்கியும், கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியோடு இணைந்து விருது வழங்கியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர். மேலும், இந்த செயல் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மதிப்பளிக்கக்கூடிய செயலாக அமைகிறது. எங்களுடைய மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உந்து சக்தியாக அமைகிறது என்றனர்.
இந்த விருது வழங்கும் விழாவில் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி, இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் ஏ. செந்தில், கோவை மாநகராட்சி முதன்மை கல்வி அதிகாரி மரியசெல்வம் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.