கோவை செஷயர் ஹோம்ஸ், ஹெல்ப் தி பிளைண்ட் பவுண்டேஷன், பி.எஸ்.ஜி., சன்ஸ் அறக்கட்டளை சார்பில், பார்வைத்திறன் குறைபாடுள்ள நபர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சவுரிபாளையம் சாலையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் நடந்தது.
இதுகுறித்து பார்வையற்றோர் அமைப்பின் நிர்வாகி மீனாட்சி செஷயர் ஹோம்ஸ் செயலாளர் துரைசாமி கூறியதாவது: செஷயர் ஹோம்ஸ் சார்பில், பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான, 45 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. 8 மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சி முடிந்த பின் அவர்களுக்கு பி.எஸ்.ஜி., நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த திட்டம் பங்கேற்பாளர்களுக்கு கணினி பயன்பாடு, ஆங்கில மொழித் திறன் மற்றும் தன்னம்பிக்கை செலுத்தும் பயிற்சிகளை வழங்குகிறது.
லென்சிங் பைபர்ஸ் இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்பாற்றல் நிதியுதவியால் இப்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிட வசதியுடன் கூடிய சேவைகள், 40 பேருக்கு வழங்கப்படுகிறது. முதுகு தண்டுவடம், பக்கவாதம், தலைக் காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலவச பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு பயிற்சி வழங்குகிறோம்.
பார்வைத்திறன் குறைந்த நபர்களும் சிறந்த வேலைவாய்ப்பில் தங்களின் திறமையை நிரூபிக்க முடியும் என்பதை இந்த முதல் பயிற்சி குழு நிரூபித்துள்ளது. இதில் மாணவர்கள் டிப்ளமா சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணைகளை பெற்றனர். அவர்களது தொழில்முறையான பயணத்தின் துவக்கமாகும் என்றார்.
பி.எஸ்.ஜி., சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். லென்சிங் பைபர்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜெயராமன், ஹெல்ப் தி பிளைண்ட் பவுண்டேஷன் நிர்வாகி பொன் மீனாட்சி, செஷயர் ஹோம்ஸ், தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை