பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழா: ஹிப்ஹாப் தமிழா உட்பட 93 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கல்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில், இதில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி உட்பட 93,036 பேர் பட்டம் பெற்றனர்.
கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 2021-22 மற்றும் 2022-23ம் கல்வி ஆண்டில் முனைவர் (PhD), முதுகலை தத்துவம் (MPhil) கலை அறிவியல், சமூக அறிவியல், அறிவியல் பாடப்பிரிவு, கல்வியியல் பாடப்பிரிவு முடித்த மொத்தம் 93,036 பேர் பட்டம் பெறுகின்றனர்.
கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டம் வழங்கினார். மேலும், இந்நிகழ்வில் தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் உட்பட பல்கலைக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இரண்டு கல்வி ஆண்டிற்கும் சேர்த்து பட்டம் வழங்கப்பட்டதால் இந்நிகழ்வு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியும் முனைவர் பட்டம் பெற்றார். ஆளுநர் சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பும் போது, விமானிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக விமானம் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதன் காரணமாக பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் தாமதமாக தொடங்கியது. காலதாமதம் காரணமாக ஆளுநர், அமைச்சர் இருவரும் உரையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil