/indian-express-tamil/media/media_files/2025/05/10/dFvcDNRzp2imDc0fjAOa.jpeg)
Coimbatore
ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பை எதிர்நோக்கும் இந்திய மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி! கோவையில் வரும் மே 13-ம் தேதி ரஷ்ய கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ரஷ்யாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதால், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா ஒரு சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளது. தற்போது ரஷ்யாவில் மருத்துவம் பயில மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்தக் கல்வி கண்காட்சி கோவையில் நடைபெறுவது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாஸ்கோ தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் எலீனா மற்றும் ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ் பாபு ஆகியோர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்தக் கண்காட்சியில் ரஷ்யாவின் பல்வேறு மருத்துவப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவத் துறை தலைவர்கள் கலந்துகொண்டு, மருத்துவத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும், இந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்காக 10,000-க்கும் அதிகமான மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கண்காட்சியில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் படிப்புகள், கல்விக் கட்டணம், பாடத்திட்டங்கள், உதவித்தொகை வாய்ப்புகள், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வசதிகள், மருத்துவப் பயிற்சி முறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விரிவாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறித்து மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் உறுதியளித்தனர். கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.