கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) மேட்டுப்பாளையம் சாலை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் வேலை வாய்ப்பு முகாமின் ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் இன்று(ஆக்ஸ்ட் 3) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்குகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 5-ம் தேதி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதற்காக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் ஆணையாளர்கள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்டத்திற்கு அளித்துள்ளனர். அதன்படி முகாமில் முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொள்ள தற்பொழுது வரை 257 நிறுவனங்கள் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். 15,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நிறுவனங்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இம்முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் இந்த முகாமில் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000க்கும் கீழ் இருக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். அதேபோல் முகாம் நடைபெறும் நாளில் உணவு, குடிநீர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
மேலும் கல்லூரியின் சார்பிலும் வேலைவாய்ப்பிற்கு வரும் இளைஞர்களுக்கு வழி காட்டுவதற்கு உதவியாளர்கள் உள்ளனர். இன்ஜினியரிங், ஹெல்த் கேர் உட்பட அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் இதில் கலந்து கொள்கின்றனர். இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிறுவனங்கள் வருகை புரிவர். பெரும்பாலும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும்" என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி துணை ஆணையர் சிவகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் கருணாகரன், வேலைவாய்ப்பு துறை அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் தங்கராஜ் உட்பட கல்லூரி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.