கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. அப்போதும் சுழற்சிமுறையில் 50 விழுக்காடு மாணவர்களுடன் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது, நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதால், செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ஆப்லைன் (நேரடி முறையில்) மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடத்தினர். ஆன்லைனில் பாடம் நடத்திவிட்டு, ஏன் நேரடி தேர்வு வைக்கின்றனர் என கேள்வி எழுப்பினர். இருப்பினும், நேரடி தேர்வு தான் கண்டிப்பாக நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்த உயர் கல்வித் துறை, மாணவர்கள் தயாராவதற்கு ஏதுவாக கால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மர்றும் சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இனிமேல் வாரத்தில் 6 நாட்களும் (சனிக்கிழமை உள்பட) அனைத்து வகுப்புகளும் ஆப்லைன் (நேரடி) முறையில் நடத்தப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை மீண்டும் திட்டமிட வேண்டும். ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் பாடங்களை மீண்டும் ரிவைஸ் செய்ய வேண்டும். அப்போது தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
செமஸ்டர் தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தயாரிப்புக்கான பாடப்பொருட்களை வழங்க வேண்டும். அதே போல், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வகுப்புகளை நடத்திட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்களும் இந்த உத்தரவை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வதுடன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil