சென்னையில் உள்ள சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் BCom படிப்பு மீதான மோகம் இந்த ஆண்டும் நீடிக்கிறது, மற்ற பாடங்களை காட்டிலும், BCom படிப்புகளுக்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை கல்லூரிகள் பெற்றுள்ளன.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகிய செய்தியில், BCom தவிர மற்ற பாடப்பிரிவுகளில், BSc Computer Science மற்றும் Bachelor of Computer Applications (BCA) போன்ற கணினி தொடர்பான படிப்புகளை மாணவர்கள் விரும்புகின்றனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கான ஆர்வம் குறைந்துள்ளதாகக் கல்லூரிகள் தெரிவித்துள்ளன, ஏனெனில் அவை இந்த ஆண்டு குறைவான விண்ணப்பங்களை ஈர்த்துள்ளன.
மாநில வாரியத்தின் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் வணிகவியல் பிரிவில், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், நிறைய விண்ணப்பங்கள் வரலாம் என்பதால், BCom படிப்புகளுக்கான போட்டி கடுமையாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 70 இடங்களுக்கு, வெள்ளிக்கிழமை வரை 5,239 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தோராயமாக, இந்த ஆண்டு Aided பிரிவில் ஒரு இடத்துக்கு கல்லூரிக்கு, 75 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த ஆண்டும் வணிகத்திற்கான தேவை அதிகமாக உள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள் (value-added courses), வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகளை கற்று தருகிறோம், மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் ஏற்பாடு செய்கிறோம்," என்று கல்லூரி முதல்வர் எஸ்.கோதை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
வணிகவியல் தவிர, இந்த ஆண்டு கணினி தொடர்பான படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
"இந்த ஆண்டு அறிவியல் பாடப்பிரிவுகளில், கணினி அறிவியலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் சேர விருப்பமில்லாத மாணவர்கள் இந்த ஆண்டு பிஎஸ்சி கம்யூட்டர் சைன்ஸ் ப்ரொகிராமிற்கு விண்ணப்பிக்கின்றனர்" என்று டிஜி வைஷ்ணவ் கல்லூரியின் முதல்வர் எஸ் சந்தோஷ் பாபூ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த மாணவர்கள் நல்ல கல்விப் பதிவைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் நன்றாக இருக்கும். அவர்களில் சிலர் பொறியியல் பட்டதாரிகளுடன் கூட போட்டியிடுகிறார்கள். இங்கு Aided மற்றும் சுயநிதி பிரிவுகளில் உள்ள 490 BCom இடங்களுக்கு 6000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுடன் கல்லூரிக்கு இதுவரை 29,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
குருநானக் கல்லூரி முதல்வர் எம்.ஜி.ரகுநாதன் கூறுகையில், "வணிகவியல் பிரிவில் இருந்து பல மாணவர்கள் கணினி தொடர்பான படிப்புகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள், இது மிகவும் தனித்துவமானது” என்றார்.
வணிகவியல் மற்றும் கணினி அறிவியலைத் தவிர, பிஎஸ்சி சைக்காலஜி, பிஏ ஆங்கிலம் போன்ற பிற படிப்புகளுக்கு கல்லூரிகள் அதிக விண்ணப்பங்களைப் பெறுகின்றன.
எங்கள் கல்லூரியில் உளவியல் படிப்புகளுக்கு அதிக தேவை உள்ளது. பிஏ ஆங்கில இலக்கியம் மற்றும் பிபிஏ போன்ற படிப்புகளுக்கும் இந்த ஆண்டு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன" என்று பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் முதல்வர் லிலியன் ஜாஸ்பர் கூறினார். இந்த ஆண்டு மொத்த விண்ணப்பங்களில் இதுவரை கணினி அறிவியலுக்கு 1642 விண்ணப்பங்களும், உளவியலுக்கு 891 விண்ணப்பங்களும், ஆங்கில இலக்கியத்திற்கு 861 விண்ணப்பங்களும் வந்துள்ளன.
சென்னை கிறிஸ்டியன் கல்லூரி முதல்வர் பி வில்சன் கூறுகையில், பிகாம் தவிர, பிஏ பொலிடிகல் சைன்ஸ், பிசிஏ இந்த ஆண்டு மிகவும் விருப்பமான படிப்புகளில் ஒன்றாகும்.
ஜூலை 10ஆம் தேதி சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“