சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவ கல்லூரியில் செய்முறை தேர்வு என்ற பெயரில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்களிடம் ரூ.22 லட்சம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் செய்முறை தேர்வுக்காக வரும் External examinerக்கு தங்குமிடம் மற்றும் உணவை ஏற்பாடு செய்ததற்காக தேவையற்ற பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழகம் தேர்வு குழுவிலிருந்து internal examiner பலரை இடைநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த பல்கலைக்கழகத்தை கேட்டுள்ளோம். தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரச்சனை எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை கண்டறிவோம். இது ஒரு தனிப்பட்ட சம்பவமாகவோ அல்லது தொடர்கதையாக நடைபெறுகிறதா என்பதை கண்டுபிடிப்போம். இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என கூறினார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய மாணவர்கள், அவர்கள் கேட்கும் பணத்தை செலுத்தாவிட்டால் தேர்வில் தோல்வியடையலாம் என்ற அச்சுறுத்தலோடு பணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 29-8 வரை தேர்வுகள் நடைபெற்றது. இதற்கு முன்னதாக மாணவர்களின் வாட்ஸ்அப் குழுவில் குறைந்தபட்சம் ரூ.10,000 செலுத்துமாறு மெசேஜ் வந்துள்ளது. கல்லூரியில் சுமார் 250 இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் உள்ள நிலையில், குறைந்ததது 220 மாணவர்களாவது இதனை நம்பி பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் மெசேஜில்," ஒவ்வொரு ஆண்டும் இறுதி ஆண்டு செய்முறை தேர்வுக்காக பணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் இதேபோல் பின்பற்றப்படும். குறைந்தபட்சம் ரூ.10,000 வசூலிக்கப்படும். அனைத்து மாணவர்களும் தங்களது வகுப்பு பிரதிநிதியிடம் மார்ச் 25ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டும் என தகவல் வந்துள்ளது. இதைதொடர்ந்து GPay மூலம் மாணவர்கள் பணம் செலுத்தியுள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜியை தொடர்பு கொண்டபோது, இந்த சட்டவிரோத பண சேகரிப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷயன் கூறுகையில், செய்முறை தேர்வுக்கு பணம் செலுத்தாததால் தான் தோல்வியுற்றதாக மாணவி ஒருவர் பல்கலைக்கழகத்திடம் புகார் கூறியதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து புகார் கூறியவர், internal மற்றும் External examiner ஆகியோருடன் விசாரணை நடைபெற்றபோது, மாணவி தேர்வில் சிறப்பாக செயல்படாததால் தோல்வி அடைந்ததாக விசாரணைக்குழு முடிவு செய்தது. ஆனால் தற்போது விரிவான விசாரணை நடத்துவோம். இதில் சம்பந்தப்பட்ட தேர்வாளர்களை தேர்வு குழுவிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக கூறினார்.
கல்லூரியின் மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறியல், மகளிர் மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவவியல் துறைகளைச் சேர்ந்த அனைத்து internal examiner களும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் கூறுகையில், பணம் வசூல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னர், மாணவர்களது வாட்ஸ் அப் குழுவில், "அனைத்து செலவுகளுக்கு பிறகு ரூ.5.76 லட்சம் மீதி இருப்பதாகவும், அது விரைவில் திரும்ப தரப்படும்" என மெசேஜ் வந்ததாக கூறினார்.
இந்த புகார் தெரிவித்த மாணவியை பொறுத்தவரை, பொது அறுவை சிகிச்சையில் 193/300, மகளிர் மருத்துவத்தில் 127/200 மற்றும் குழந்தை மருத்துவத்தில் 60/100 ஆகிய மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் பணம் வசூலிக்கப்பட்ட General Medicine clinical தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். அதில் அவர் 43 மதிப்பெண் பெற்றுள்ளார்.
செய்முறை தேர்வுக்கு பணம் வசூலிக்கப்பட்டபோது அதற்கான ரசீது தரப்படாததால் மாணவி பணம் செலுத்த மறுத்துள்ளார். மேலும் அந்த மாணவி நன்றாக படிக்க கூடியவர் என்றும் சாதாரண இந்த தேர்வில் தோல்வியடைந்திருப்பதற்கான வாய்ப்பு குறைவு என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய மூத்த ஆசிரியர், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பணம் சேகரிப்பது வழக்கமான நடைமுறைதான். அவர்கள் சேகரித்த பாதி தொகையை External examinerகளுக்கு செலுத்துகிறார்கள். ஆனால் இது ஒரு அரசு கல்லூரி என்றார். ஆனால் துணைவேந்தர் சேஷயன் கூறுகையில், கொரோனா காரணமாக External examiner ஆன்லைனில் தேர்வுகளை நடத்தினர். இதனால் அவர்கள் தங்குவதற்கோ உணவுக்கோ பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை அவர்கள் நேரில் வந்திருந்தாலும், அரசு வசதிகளை செய்து கொடுத்திருக்கும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.