பொறியியல் கலந்தாய்வு குழப்பத்தால் கலக்கத்தில் தமிழக மாணவர்கள்

கடந்தாண்டு கவுன்சிலிங்கிற்கான ஆயத்தப் பணிகள் ஏப்ரலில் தொடங்கியது. கலந்தாய்வு ஜூலை மாதத்தில் நடைபெற்றது.

By: March 19, 2019, 1:42:40 PM

இந்தாண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மெத்தனப் போக்கு நிலவுவதால், தமிழக பொறியியல் பட்டதாரிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்திருக்கும் நிலையில், பொறியியல் கவுன்சிலிங்குக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதோடு, கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் அல்லது தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறதா என்ற தகவலும் இல்லை.

கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குழுவிலிருந்து விலகியதிலிருந்து மாணவர்களிடையே இந்த குழப்பம் ஏற்பட்டது.

கமிட்டியில் உயர்கல்வித்துறை செய்த மாற்றங்களுக்கு அதிருப்தி தெரிவித்து சூரப்பா ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 22 ஆண்டுகளாக பொறியியல் கலந்தாய்வை நடத்துவது அண்ணா பல்கலைக்கழகம்தான். இந்நிலையில் இந்தாண்டு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் பொறியியல் கலந்தாய்வை நடத்தும் எனக் கூறப்பட்டது, ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை.

பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது மாணவர்களின் படிப்பைப் பாதிக்கும் என கல்வியாளர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் கலந்தாய்வு எப்போது என்பதை அறிந்துக் கொண்டுதான் பிற மாநிலங்களின் கலந்தாய்வில் பங்கேற்பது பற்றி முடிவு எடுக்க முடியும் என்பதால், பொறியியல் கலந்தாய்வுக்கான நடவடிக்கை எடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

கடந்தாண்டு கவுன்சிலிங்கிற்கான ஆயத்தப் பணிகள் ஏப்ரலில் தொடங்கியது. கலந்தாய்வு ஜூலை மாதத்தில் நடைபெற்றது. அப்படிப் பார்க்கும் போது நம்மிடம் சில நாட்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அதற்குள் கவுன்சிலிங் குழப்பத்தை தீர்த்து விடுமா தமிழக அரசு?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Confusion over the engineering counselling process in tn

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X