கொரோனா தொற்று பரவல் காரணமாக, சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், இந்தாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 92 ஆயிரம் இடங்களை இந்தாண்டு ஆன்லைன் முறையில் நிரப்ப உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையின் முன்னணி கல்லூரியான லயோலா கல்லூரி, மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் முழுவதையும் ஆன்லைன் முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முறையின் அடிப்படையிலேயே தங்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. ஆனால், இந்தாண்டு இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும், நேர்காணலுக்கும் அவர்கள் கல்லூரி வரத்தேவையில்லை. ஆன்லைனிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாணவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்களை டிஜிலாக்கரில் சேகரிக்க அவர்களை கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின்னர், நேர்காணல், Google Meet போன்ற செயலியின் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தாண்டு பி,காம் பிரிவில் பிகாம் அக்கவுண்டிங் அண்ட் பைனான்ஸ் மற்றும் பிகாம் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் என்ற 2 புதிய படிப்புகளை துவங்க உள்ளோம். இந்த படிப்புகளில், பின்டெக், பிளாக் செயின் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகள் இடம்பெற்றிருக்கும். பின்டெக் தொழில்நுட்பத்தில் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை இந்த புதிய படிப்புகளில் இடம்பெற்றிருக்கும். இதன்காரணமாக, இந்த படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான வேலைவாய்ப்புகள் மிக எளிதாக கிடைக்க வழிவகை ஏற்படும் என்று அவர் கூறினார்.
சென்னை கிறித்தவ கல்லூரியிலும் ஆன்லைன் முறையிலேயே இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக முதல்வர் வில்சன் தெரிவித்துள்ளார். மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதில் விண்ணப்பித்து தங்களது கல்விச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால், அது தரவரிசைக்குட்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் இதுவரை நேர்காணல் முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததாகவும் இந்தாண்டு ஆன்லைன் நேர்காணல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்தாண்டு புதிதாக எம்எஸ்சி சைக்காலஜி மற்றும் எம்எஸ்சி மனிதவள நிர்வாகம் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் கோதை தெரிவித்துள்ளார்.
டி ஜி வைஷ்ணவ கல்லூரி, மாணவர் சேர்க்கைக்கான நேர்காணலை, வீடியோ கான்பரன்சிங் முறையில் திட்டமிட்டுள்ளது.
உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலத்தில் உள்ள 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் சேர்வதற்கான விண்ணப்பம் ஜூலை 20ம் தேதி முதல் www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு www.tngtpc.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.