பேராசிரியர்களுக்கான கவுன்செலிங் இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்தி ஐம்பத்தெட்டாயிரத்தி நூற்றி ஐம்பத்தேழு (1,58,157) மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வில் நான்கு சுற்றுகளில் மூன்று சுற்றுகள் முடிவடைந்திருக்கின்றன. நான்காவது சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நான்காவது சுற்று வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி முடிவடைகிறது. இதுவரை இந்த மூன்று சுற்று முடிவடைந்த இந்த சூழலில், நான்காவது சுற்றில் நடந்த நிகழ்வுகளுக்கு பிறகு 89,585 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு, 80,353 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள். ஆனால், தற்போது நான்காவது சுற்று முடிவடைவதற்கு முன்பாகவே 9,232 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.
நான்காவது சுற்று முடிந்த பிறகும், நிரப்பப்படாத இடங்களை இணையதளத்தின் மூலமாக அறிவித்து மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படும். ஆகவே, பொறியியல் கல்லூரிகளில் படிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மாணவர்களின் எண்ணத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று உயர்கல்வித் துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
கல்லூரி ஆசிரியர்களுக்கான தேர்வின் இறுதியில் நான்காயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆகவே 4,000 துணை பேராசிரியர்கள் தேர்ந்தெடுப்பதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணிகளும் விரைவில் நடைபெறும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பேராசிரியர்களுக்கான கவுன்செலிங் நடைபெறாமல் இருந்தது. ஆகவே, இந்த முறை கவுன்செலிங்கிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கவுன்செலிங் முறையில் கலந்துகொள்ளும் தகுதியுடைய பேராசிரியர்கள் மொத்தம் 5,408 பேர் கலந்துகொள்ளலாம். இதில் தற்போது 3,000 காலி இடங்கள் உள்ளது” என்று கூறி பேராசிரியர்களுக்கான கவுன்செலிங்கை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
பேராசிரியர்கள் 10 நாட்களுக்குள்ள இதில் விண்ணப்பிக்கலாம். அனுப்பப்படும் விண்ணப்பங்களை மாநில கல்வித்துறை இயக்குனர் சரிபார்த்து, தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.