கோயம்புத்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள எல்காட் நிறுவனத்தின் மூலம் 3500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க கூடும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாத இறுதியில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறினார்.
கோயம்புத்தூரில் விளாங்குறிச்சி டைட்டில் பார்க் வளாகத்தில் எல்கார்ட் நிறுவனத்தின் சார்பில் புதிய கட்டிடத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். புதிய எல்கார்ட் வளாகத்தை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் , வாரப்பட்டி மற்றும் சூலூர் பகுதிகளில் அமைய உள்ள தொழில் பூங்காக்களுக்கான நில ஒதுக்கீட்டு ஆணைகளையும் தொழில் முனைவோருக்கு வழங்கினார்.
பின்னர் இது குறித்து பேட்டியளித்த எல்கார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன், "கோயம்புத்தூரில் திறக்கப்பட்ட இந்த கட்டிடம் எல்கார்ட் நிறுவனத்தின் ஒன்பதாவது கட்டிடம் எனவும் இதன் மூலம் 3500 பேர் பணிபுரியும் வகையில் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, மேலும் இந்த கட்டிடம் உடனடியாக பயன்பாட்டிற்கு வருகிறது " என்று தெரிவித்தார்.
இன்று முதலே ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுவதாகவும், இன்று இரு நிறுவனங்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் எனவும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கோவை வாரப்பட்டி ராணுவ பூங்காவில் அமைய உள்ள நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டு அணைகளும் வழங்கப்பட்டன. வாரப்பட்டி இராணுவ தொழில் பூங்காவிற்கு டிட்கோ, சிப்காட் மூலம் இடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இதன் மூலம் இராணுவத்திற்க்கு தேவையான உபகரணங்களை பெரிய நிறுவனம் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை மாறி சிறிய நிறுவனங்களும் இராணுவ உபகரணங்களை செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.
வாரப்பட்டியில் அமைய இருக்கும் ராணுவ பூங்காவில் 65 ஏக்கரில் 110 நிறுவனங்கள் வரை வர இருப்பதாகவும் நில ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் தெரிவித்தனர். இன்று முதல்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது.