scorecardresearch

தமிழகம் உட்பட 10 மாநிலங்கள் ஷாக்… அரசு பொதுத் தேர்வை பெருமளவில் புறக்கணித்த மாணவர்கள்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,521 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டு 2019யைக் காட்டிலும் 2022இல் தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

தமிழகம் உட்பட 10 மாநிலங்கள் ஷாக்… அரசு பொதுத் தேர்வை பெருமளவில் புறக்கணித்த மாணவர்கள்!

அசாம், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அதிக அளவிலான மாணவர்கள் பதிவுசெய்தும், தேர்வு எழுதவில்லை.

கொரோனாவுக்கு முந்தைய ஆண்டு 2019 மற்றும் கொரோனாவுக்கு பிறகு 2022 என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாதவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாதவர்கள் எண்ணிக்கை கடந்த 2019இல் 21,761 ஆக இருந்த நிலையில், 2022இல் 42,521 ஆக அதிகரித்துள்ளது. 2.2%இல் இருந்து 4.4% ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது.

அதேபோல் 12ஆம் வகுப்பில் 2019ஆம் ஆண்டு 18,599 ஆக இருந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 31,034 (3.7%) ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷாவின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது பதிலில்லை. இருப்பினும் மாநிலக் கல்வி வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “உயிரிழப்பு, கொரோனவுக்குப் பிறகு பெற்றோரின் மோசமான உடல்நிலை, குடும்பத்தில் ஏற்படக்கூடிய துயரம், புலம்பெயர்வு ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது” என்றார். ஆனாலும், அரசு இதுகுறித்து விசாரணை ஏதும் நடத்தவில்லை.

ஒடிசா கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ் கூறுகையில்,” 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த 5.71 லட்சம் மாணவர்களில் 43,489 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இது தொடரக் கூடாது என பள்ளி வாரியாக தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனவால் மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்று நேரடியாக கல்வி கற்கவில்லை. இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அஞ்சி நம்பிக்கையை இழந்தனர். கொரோனவுக்கு முன்பு 8ஆம் வகுப்பில் இருந்தவர்கள் தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்பிற்கு சென்றனர். இரண்டு ஆண்டுகள் முறையாக கல்வி கற்கவில்லை. பலர் ஆன்லைன் வகுப்புகளில் சேர முடியவில்லை. இது இந்தியா முழுவதும் உள்ள பிரச்சினை” எனத் தெரிவித்தார்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது 2020 மற்றும் 2021 தேர்வு நடைபெறவில்லை. தேர்வு ரத்து செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் சென்றனர். இந்தநிலையில் இந்தாண்டு மீண்டும் நேரடி முறையில் தேர்வு நடத்தப்பட்டது.

பெரும்பாலான மாநில அரசுகள் கொரோனாவின் போது கற்றல்-கற்பித்தலில் ஏற்பட்ட இடையூறு காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருந்திருக்கலாம் என காரணம் கூறுகின்றனர். மேலும் சிலர், இந்தாண்டும் ஆன்லைன் தேர்வு நடத்தப்படலாம் என்று எதிர்பார்த்திருக்கலாம் அல்லது தேர்வு ரத்து செய்யப்படலாம் என்று எண்ணியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

எனினும் பல மாநில அரசுகள் மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Covid effect states see big jump in students skipping class 10 12 board exams this year