தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வாணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கொரோனா பரவல் காரணமாக வருகின்ற மே 28,29,30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த, 69 குரூப் -1 பதவிகளுக்கான முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கொரோனா பரவல் சற்று குறைந்திருந்த இந்த ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கடந்த மார்ச் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 536 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வு வருகின்ற ஜூன் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமன்றி வருகின்ற ஜூன் 5ஆம் தேதி நடக்க இருந்த ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில்(டேராடூன்) ஜனவரி 2022 ஆம் பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விண்ணப்பிக்கும் தேதி மட்டும் 21.05.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி மாதம் 26 தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil