அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்:அங்கன்வாடி உதவியளார் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் 468 பணியிடங்கள் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது கடலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், மாவட்ட திட்ட அலுவலகம் கடலூர் மாவட்ட திட்ட அலுவலகத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 222 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 3 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 243 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் பெண்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அங்கன்வாடி / குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு தமிழ் சரளமாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர் பணி நியமனத்திற்கு 01.04.2025 இன்படி 25 வயது முதல் 35 வயது வரையுடையோர் விண்ணப்பிக்கலாம் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரையும், விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி வகுப்பினர் 25 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அங்கன்வாடி உதவியாளர் பணி நியமனத்திற்கு 01.04.2025 இன்படி 20 வயது முதல் 40 வயது வரையுடையோர் விண்ணப்பிக்கலாம் மாற்றுத் திறனாளிகள் 20 வயது முதல் 43 வயது வரையும், விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி வகுப்பினர் 20 முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு
விண்ணப்பிக்க உரிய விண்ணப்பத்தினை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து 09.04.2025 முதல் 25.04.2025 வரை சம்பந்தப்பட்ட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய்/ தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (குள்ளத்தன்மையுடையவர், தொழு நோயிலிருந்து குணமடைந்தவர் (40% No deformity in upper limbs with intact sensory and motor components) அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும். மேலும் அரசு வழிகாட்டுதலின்படி நேர்காணலுக்கு அழைக்கப்படும் தகுதியான நபர்கள் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.
பணி நியமனத்திலிருந்து ஓராண்டிற்குள் தொகுப்பூதியமாக மாதம் ஒன்றிற்கு பணியாளருக்கு ரூ. 7,700/- குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ. 5,700/- மற்றும் அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ. 4,100/- வழங்கப்படும்
பின்னர் 12 மாதங்கள் முடிந்த பின்னர் அங்கன்வாடி பணியாளருக்கு (நிலை 4) ரூ. 7,700 – 24,200/-, குறு அங்கன்வாடி பணியாளருக்கு (நிலை 3) ரூ. 5,700 – 18,000/- மற்றும் அங்கன்வாடி உதவியாளருக்கு (நிலை ரூ.4,100 – 12,500/- என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்
இவ்வாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.