நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமான தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பொறியியல் மாணவர்கள் பொறியியல் அல்லாத பணிகளை தேர்ந்தெடுப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இது "வளங்களை வீணடிப்பதாகும்" என்றார்.
சைபர் பாதுகாப்பு நிபுணரும், இந்தியாவின் முதல் உள்நாட்டு கணினி நுண்செயலியான 'சக்தி' யின் தயாரிப்பில் முன்னணி வகித்தவருமான காமகோடி கூறுகையில், "தற்போதைய நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிவில் மற்றும் விண்வெளிப் பொறியாளர்கள் கிடைப்பது குறித்து நான் கவலைப்படுகிறேன்.
பொறியியல் அல்லாத வேலை ஏன்?
சமீபத்தில், எனது பயணங்களின் போது, நான் ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்தேன், மார்க்கெட்டிங், உயர்தர வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அவர்களின் (பொறியியல்) பின்புலம் பற்றிக் கேட்ட போது, அவர்கள் படித்ததற்கும் தற்போதைய வேலைக்கும் முற்றிலும் தொடர்பில்லாதவையாக இருந்தது. இது வளங்களை வீணடிப்பதாகும் "என்றார்.
காரணங்களை ஆராய்ந்து கூறிய காமகோடி, "இதற்கு இரண்டு அம்சங்கள் தனித்து நிற்கின்றன. ஊதியம் மற்றும் பணிச்சூழல் ஆகும். அதிக ஊதியம் மற்றும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி, வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே அலுவலக வேலை வாய்ப்புகளை ஈர்க்கிறது. வீட்டில் சமைத்த உணவுகள் சாப்பிட்டுக் கொண்டு, வேலைகளை முடித்து திரைப்படம் பார்ப்பது என அதிக வசதிகளையும் ஈர்ப்புகளையும் வழங்குகிறது. மாறாக அதே நேரம், சிவில் இன்ஜினியராக பகலில் வெயிலில் நின்று கொண்டு ஆன்-சைட் வேலை செய்வது. அப்போது உடல் அசௌகரிகம் மற்றும் குறைந்த ஊதியமே கிடைக்கிறது" என்று கூறினார்.
தினமும் மனநல வகுப்புகள்
ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் மேலும் கூறுகையில், கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் கல்லூரியில் இன்னும் உள்ளது தெளிவாகத் தெரிகிறது என்றார். மாணவர்களின் கற்றல் கவனத்தை கணிசமாகக் குறைக்கிறது. நண்பர்களிடையே சமூகமயமாக்கல், சகஜ நிலை திரும்பாதது மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
மாணவர்கள் இரண்டு ஆண்டுகளாக கல்லூரி வளாகத்தில் இல்லை. இது அவர்கள் தங்கள் நண்பர்களுடன் பழகுவதை குறைத்தது. அவர்கள் திரும்பி வந்தபோது, நண்பர்கள் சிலர் கூடுதல் வகுப்புகளை தேர்ந்தெடுத்தனர். சிலர் வீட்டில் ஆன்லைன் திறன்களை கற்றிருந்தனர். இது அவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளைப் பெற உதவியது. இந்த உணர்தல் சிலருக்கு பின்தங்கிய உணர்வை உருவாக்கியது மற்றும் மாணவர்கள் மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்தியது. அனைத்து மாணவர்களும் வளாகத்தில் இருந்திருந்தால், ஒருவருக்கொருவர் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் இந்த நிலைமை வேறுபட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
கடந்த 12 மாதங்களில் நிறுவனத்தில் 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர், "மாணவர்களுக்கு மனநல வகுப்புகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் ஏன் மன அழுத்தத்தை உணர்கிறார்கள் என்பதற்கான நான்கு காரணங்களை அடையாளம் கண்டுள்ளது. தனிப்பட்ட காரணங்கள், உடல்நலம், நிதி மற்றும் கல்வி அழுத்தம் ஆகியவைகள் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இதை சரி செய்ய விடுதிகளில் தினமும் மாணவர்களுக்கு மனநல வகுப்புகள், ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரேங்க்களின் அடிப்படையில் பாகுபாடு?
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்புகளை நாங்கள் எளிதாக்கியுள்ளோம், மேலும் தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் உள்ள தேசிய சுகாதார ஆணையத்துடன் மனநலக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளோம்" என்றார்.
மனநலக் கணக்கெடுப்பில் பாகுபாடும் காரணங்கள் கண்டறியப்பட்டதா என்று கேட்டதற்கு, ஜே.இ.இ அட்வான்ஸ்டில் தேர்வில் பெற்ற ரேங்க்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது சாத்தியம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் நிறுவனம் அதற்கு எதிராக உள்ளது.
ரேங்க்களின் அடிப்படையில் பாகுபாடு குறித்து நாங்கள் நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்கள் வளாகத்திற்கு வந்தவுடன் அவர்களின் மதிப்பெண், ரேங்க் பற்றி ஆசிரியர்கள் ஒருபோதும் கேட்பதில்லை. இருப்பினும், மாணவர்கள் ரேங்க்களைப் பற்றி விசாரிக்கலாம். இது மாணவர்களிடையே பாகுபாட்டிற்கு வழிவகுக்கும். இந்த பிரச்சினைகளுக்கு எதிராக நாங்கள் மாணவர்களை விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்று காமகோடி கூறினார். தொடர்ந்து கடந்த 1.5 ஆண்டுகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்து எந்த புகாரும் தன்னிடம் வரவில்லை என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“