நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. தேர்வு முடிந்து 45 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னமும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள், தங்கள் வாழ்வின் பொன்னான நேரத்தை இழக்கின்றனர் என எய்ம்ஸ் பேராசிரியர் டாக்டர் அமித் குப்தா கூறுகிறார்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நிறைவு
அவர் கூறுகையில், " நீட் தேர்வர்களுக்கு எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது தெரியாது. பல ஆண்டுகளாக மருத்துவ கனவிற்காக உழைத்துள்ளதால், நீட் முடிவுக்காக காத்திருக்கின்றனர். முடிவுகள் தாமதமாகும் பட்சத்தில், மாணவர்கள் மற்றவற்றைத் தேர்வு செய்வதற்கான விருப்பங்களும் குறைகிறது. பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், விண்ணப்பங்கள் பெறுவதை ஏற்கனவே மூடிவிட்டனர். எனவே, மாணவர்கள் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.
ஆக்ராவின் எஸ்என் மருத்துவக் கல்லூரியின் துறை பேராசிரியர் டாக்டர் தேஜ்பால் சிங் பேசுகையில், " கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஆறு மாதம் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இது அவர்களது மருத்துவ படிப்பில் நிச்சயம் பிரதிபலிக்கும். கல்வி பொறுப்புடன், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மருத்துவ கடமையும் உள்ளது.
ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பு
கொரோனா மற்றும் டெங்கு காரணமாக, கடந்தாண்டு முதல் மருத்துவர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். ஆறு மாதத்தில், முதலாம் ஆண்டின் பாடத்திட்டத்தை முடிப்பது இயலாத ஒன்று. அவர்களுக்கு கூடுதல் நேரம் அளித்தால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும். ஆசிரியர்கள் கூர்மையான இரண்டு முனைகளைக் கொண்ட கத்தியை கையாளும் நிலையில் உள்ளனர்" என தெரிவித்தார்.
டெல்லி பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் சத்யேந்திர சிங் கூறுகையில், " 2021ஆம் ஆண்டின் மருத்துவ சேர்க்கை ஓரிரு மாதங்களுக்கு முன்னரே முடிந்திருக்க வேண்டும். ஆனால், நவம்பர் மாதமும் கூட மருத்துவ சேர்க்கை முடியாத நிலையில் உள்ளோம். ஆசிரியர்கள் மீதான பணிச் சுமை அதிகரித்து வருகிறது. இது 2022இல் சேரும் மாணவர்கள் வரை தொடரும். எவ்வித தாமதமும் இல்லையென்றால், அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் நடைபெறும்.
எனவே, ஆசிரியர்களுக்கு இரண்டு பேட்ச் மாணவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். உடலியல் மற்றும் உடற்கூறியல் ஆகியவை எம்பிபிஎஸ்ஸின் அடிப்படைகளாகும். அவற்றை கற்பிக்காமல்விட முடியாது. இல்லையெனில், அது மாணவர்களுக்குப் பிற்காலத்தில் படிப்பை கடினமாக்கிவிடும். ஒரே நல்ல செய்தி, நீட் 2021இல் தேர்ச்சிபெறாத மாணவர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீட் 2022 அடுத்த 6 மாதத்திற்குள் நடைபெறும்" என்றார்.
ஆசிரியர்கள் பணி சுமை ஒருபுறம் இருக்க, மாணவர்களும் நீட் முடிவுக்காக காத்திருக்காமல் வேறு பாடத்துக்கான நுழைவு தேர்வை எழுதி அதில் சேர தொடங்கியுள்ளனர். ஆந்திராவை சேர்ந்த நீட் தேர்வர் கிஷோர் கூறுகையில், " நீட்டில் தேர்ச்சிபெறாவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் இருந்தது. அதன் காரணமாக, வேறு நுழைவு தேர்வுக்கும் படித்ததில் தேர்ச்சிபெற்றுள்ளோம். நீட் முடிவு தாமதமாகுவதால், மருத்துவ கனவை உதறிவிட்டு, பயோடெக்னாலஜி படிப்பில் சேர போகிறேன்" என கூறுகிறார்.
ஆனால், பல மாணவர்கள் எவ்வித மற்றொரு சாய்ஸ் இல்லாமல் நீட் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர். பெரும்பாலும், தீபாவளிக்கு முன்பு தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil