தமிழகத்தில் பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்ப தேர்வுகள் வாரிய தலைவரும், தொழில்நுட்ப கல்வி ஆணையருமான ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமோ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 12 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை தொடர்ந்து (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெறும். தினமும் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரையும், பிற்பகலில் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடைபெறும்.
செய்முறை தேர்வுகள் அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்குகின்றன. தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக, தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளத்தில் (www.dte.tn.gov.in) முழு விவரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும். தேர்வு பணிகள் முடிவடைந்து, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“