/indian-express-tamil/media/media_files/2024/11/08/mjNDqTmWXf3DG127zAhD.jpg)
ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு ஜூலை 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம்) நடத்தப்படுகின்றன. அரசு வேலைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தநிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜூலை 28 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம். புதுமுக இளநிலை, இளநிலை தேர்வுக்கு ரூ.100-ம், இடைநிலை தேர்வுக்கு ரூ.120-ம், முதுநிலை தேர்வுக்கு ரூ.130-ம், உயர் வேகம் தேர்வுக்கு ரூ.200-ம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.