/tamil-ie/media/media_files/uploads/2021/09/govt-jobs-1200-1.jpg)
தமிழக அரசுப் பணிகளுக்கு தேவையான கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு கணினி சான்றிதழ் தேர்வு (Certificate course in Computer on Office Automation - COA) தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் சில பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள்.
குறிப்பாக தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்காக நடத்தப்படும் குருப்-4 தேர்வுக்கு உரிய தொழில்நுட்பக் கல்வித்தகுதி (தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து) பெற்றிருந்தாலே விண்ணப்பிக்கலாம் என்றாலும், பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் தங்களின் தகுதிகாண் பருவத்துக்குள் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர்களின் பதவி பணிவரன்முறை செய்யப்படும்.
அதேபோல், தமிழக அரசின் சுற்றுலா துறையில் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி-யால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்கவே முடியும். மேலும், தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பதவிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் பி.எஸ்.சி, பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில், கணினி சான்றிதழ் தேர்வு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜுன் மாதம் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 16-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தேர்வுக் கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளப் (www.dte.tn.gov.in) பக்கத்தில் விரிவாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.