நோயாளிகளுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதி, இரக்கமுள்ள, கவனிப்பான மருத்துவ சேவை செவிலியர்களாக பணியாற்றி உறுதி மொழி எடுக்க வேண்டும் என டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வட்டமலை பாளையம் கங்கா செவிலியர் கல்லூரியின் இளங்கலை பட்டம் பெற்ற 300 மாணவ மாணவிகளுக்கு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி பட்ட சான்றுகளை வழங்கி மாணவ மாணவிகள் மத்தியில் பேசினார்.
அப்போது துணைவேந்தர் பேசியதாவது; செவிலியர் பணி என்பது மற்ற துறைகளைப் போன்று சாதாரண பணி அல்ல. நோயாளிகளை அன்போடு நேசிக்கும் பணி. அர்ப்பணிப்புள்ள பணி. இந்த பணியில் ஈடுபடுபவர்கள் ஏதோ பணி செய்கிறோம் என்ற எண்ணத்தில் இல்லாமல் அக்கறையுடன், சேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும்.
வேகமாக வளர்ந்து வரும் மருத்துவத்துறையில் சவால்களை தழுவி புதுமை படைக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும், மற்றும் இரக்கமுள்ள கவனிப்பு அவசியம்.
மேலும் நோயாளிகளுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதி மருத்துவ சேவை செய்ய வேண்டும். பள்ளியில் இருந்து கல்லாக வெளிவரும் மாணவ மாணவிகளை சிற்பியாக இருந்து உங்களை சிலையாக செதுக்கிய ஆசிரியர்களை போற்ற வேண்டும். உலகம் முழுவதும் செவிலியர்கள் தேவை அதிகமாக உள்ளது, என்று பேசினார்.
பட்டசான்றுகளுக்கு முன்பு செவிலியர் பயிலும் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்று சான்றிதழை பெற்றுக் கொண்டனர். இதில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்தர் ராகுல், கங்கா மருத்துவமனை இயக்குனர் நிர்மலா ராஜ சபாபதி, டாக்டர் ராஜா சண்முக கிருஷ்ணன், டாக்டர் சுமா நடராஜன், கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் ஜெபக்குமாரி, சுதா, டாக்டர் சி.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“