தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் நேரடி வகுப்புகள் நடத்த முடியாததாலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைவடைந்ததையடுத்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்லூரிகள் மீண்டும் டிசம்பர் மாதத்தில் திறக்கப்பட்டன.
இந்நிலையில், சற்று குறைந்திருந்த கொரோனா தொற்றின் பரவல் மார்ச் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக மீண்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி இறுதியாண்டு, முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. தற்போதைய நிலையில் நேரடியாக தேர்வுகளை நடத்த முடியாததால், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்து பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 15 முதல் 22 வரை தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி செய்முறை தேர்வுகள் மட்டும் மார்ச் 31ம் தேதிக்குள் நேரடியாக நடைபெறும். செய்முறை தேர்வுகளை நடத்த முடியாதவர்கள் அனுமதி பெற்று பின்னர் நடத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் சமர்ப்பித்தல், வாய்மொழித்தேர்வு (viva) போன்றவற்றை ஆன்லைனில் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil