பள்ளி விதைகளே உலகின் விருட்சங்களாக மாறுங்கள்

இதுவரையிலும் படித்ததையெல்லாம் எழுதிப் பாருங்கள், அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்து தேர்வை மிகத் துணிச்சலோடு எழுதுவதற்கு தூண்டுகோலாக இருக்கும்

முனைவர் கமல. செல்வராஜ்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பிறந்தால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு விதமான பதற்றமும் பரபரப்பும் இயல்பாகத் தொற்றிக் கொள்வது வழக்கம். அதிலும் 10 மற்றும் +2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களின் முகத்தில் அதுவரை இருந்த மகிழ்ச்சியும்… ஆனந்தமும்… அடங்கியே போகும்.

இதுவரை சாப்பிடு… சாப்பிடு… எனக் கெஞ்சிக்கொண்டிருந்த அம்மா, இப்போ எந்நேரம் வாய் திறந்தாலும் ஓயாம படியிடா… படியிடா… எனப் பாட்டாவே பாடிட்டிருங்காங்க… அங்கிள், என என் நண்பனின் +2 படிக்கும் மகன் என்னிடம் கூறியபோது, அவனுக்கு என்னப் பதில் சொல்வதென்று நானே திணறிப்போனேன்.


ஆனாலும் ஒருசில நிமிடங்களில் என்னைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மாணவனிடம் நான் கூறினேன், ‘இப்பவெல்லாம் வீட்டில இருக்கிற உங்க அம்மா மட்டுமல்ல, நம்ம நாட்டு பிரதம மந்திரி மரியாதைக்குரிய நரேந்திர மோடி கூட 10 மற்றும் +2 தேர்வு எழுதும் மாணவர்களைப் பற்றிக் கவலைப்படுராரு, அவர்கூட கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மாணவர்களை டில்லியில் அழைத்து பயமின்றித் தேர்வு எழுதுவது எப்படி? என்று பேசி வருகிறார். கூடவே புத்தகமும் எழுதியிருக்கிறார். இப்படி வீட்டில் இருப்பவர்களும் நாட்டில் இருப்பவர்களும் உங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்றால் அதில் ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என்றுதானே அர்த்தம் எனக் கூறினேன்.

அவனும் ஆமா… ஆமா… பெரிய முக்கியத்துவம் எனக் கூறிக்கொண்டே வீட்டிற்குள் சென்று விட்டான்.

அருமை மாணவர்களே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் இந்தப் 10 மற்றும் +2 தேர்வுகள், உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்றும், திருப்பத்தை ஏற்படுத்துவதென்றும். பத்தாம் வகுப்பு தேர்வில் நீங்கள் நல்ல மார்க் வாங்கினால், எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கையை நிர்ணையிக்கும் +2 வகுப்பில் நீங்கள் விரும்பும் பாடத்தைப் படிப்பதற்கு முடியும். அதைப் போன்று +2 தேர்வில் நீங்கள் அதிக மார்க் பெற்றால், அடுத்து நீங்கள் புதுமையான நல்ல பாடங்களை, பிரபலமான கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் படிக்க முடியும்.

இந்த இரண்டு வகுப்புத் தேர்வுகளிலும் நீங்கள் சமத்துகளாகத் தேர்ச்சிப் பெற்று விட்டால் அதன் பிறகு உங்களின் எந்தப் படிப்பிலும், உங்களின் பின்னால் வந்து, உங்களைக் கட்டாயப் படுத்தி படியுங்கள்… படியுங்கள்… என எவரும் ஓயாமல் கூறப்போவதில்லை. அதன் பிறகு நீங்கள் சுதந்திரப் பறவைகளாக மாறிவிடுவீர்கள். அதன் பிறகு இன்று பள்ளிகளில் விதைகளாக இருக்கும் நீங்கள், இந்த உலகத்தின் விருட்சங்களாக மாறிவிடுவீர்கள்.

1. அதனால் இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியது, இந்த 10 மற்றும் +2 தேர்வில் நான் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதிற்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

2. தினமும் அதிகாலையில், உங்கள் வீட்டிலுள்ள எவருடைய வற்புறுத்துதலும் இல்லாமல், நீங்கள் சுயமாகவே எழும்பி படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களில் எப்படிப்பட்ட, ஐயப்பாடுகள் இருந்தாலும், அவற்றை அவர்களிடம் எவ்விதத் தயக்கமுமின்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

4. தேர்வு முடியும் வரை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் செல்போன், கம்பியூட்டர், டி.வி. இன்டர்நெட் ஆகியவற்றிற்கு நீங்களாகவே கொஞ்சம் விடைகொடுங்கள். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். ஆனால், தொழில்நுட்பம் உங்களைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

5. தூக்கத்திற்கும் ஓய்விற்கும் அறவே விடை கொடுக்காதீர்கள். தேவையான அளவு தூக்கமும், ஓய்வும் கட்டாயம் தேவை.

6. தேவையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையும், ஊர் வம்பு அளப்பதையும் அறவே நிறுத்திக் கொள்ளுங்கள்.

7. கருத்தொத்த இரண்டோ மூன்றோ வகுப்புத் தேழர்களுடன், ஒத்திருந்து கலந்துரையாடிப் படிப்பது மிகுந்தப் பலனைத் தரும்.

8. இதுவரையிலும் படித்ததையெல்லாம் எழுதிப் பாருங்கள், அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்து தேர்வை மிகத் துணிச்சலோடு எழுதுவதற்கு தூண்டுகோலாக இருக்கும்.

9. ஒரு வேளை இதுவரை ஒரு பாடத்தைக் கூட படிக்காமல் இன்று படிக்கலாம்… நாளை படிக்கலாம்… என நாட்களைக் கடத்தி வந்த மாணவர்கள் மனதில், இனி எப்படிப் படிப்பது? என்ற ஐயப்பாடு எழலாம். அவர்கள் அனைவரும் அந்த ஐயப்பாட்டை விட்டுவிட்டு என்னால் இனியும் முடியும் என்னும் தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டுப் படியுங்கள் நிச்சயமாக உங்களாலும் வெற்றி வெறுவதற்கு முடியும்.

10. தேர்வு எழுதும் போது மனதிற்குள் எவ்வித பதற்றமும். குழப்பமுன்றி நிதானமாகச் சிந்தித்து எழுதுங்கள்.

இந்த முறைகளைப் பின்பற்றி நீங்கள் 10 மற்றும் +2 தேர்வு எழுதினால் தேர்வில் மட்டுமல்ல உங்கள் எதிர்கால வாழ்விலும் வெற்றி பெறுவது நிச்சயம்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Education school students 10th 12th exam special story

Next Story
X,XI,XII பொதுத் தேர்வுகள்: 3,012 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com